பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலகிருஸ்ணன் ரதிகரன் (வயது 28) என்பவர் ஒரு வருடத்திற்குப் பின்னர் இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார்.
மூதூர் – சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த நபர் மாவீரர் நாளை முன்னிட்டு கவிதை ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியமைக்காக 27.11.2020 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் திருகோணமலையில் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் இருந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.