ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திணிக்காதே திணிக்காதே ஆணைக்குழுக்களை திணிக்காதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்,
வேண்டாம் வேண்டாம் மரண சான்றிதழ் வேண்டாம், வேண்டாம் வேண்டாம் இழப்பீடும் வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதா கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை வவுனியா மாவட்ட செயலகத்தில் சந்திப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் அந்த தகவலின்படி இதுவரை நேரமும் அவர்கள் வருகை தரவில்லை. எந்தவித ஆணைக்குழுக்களும் தேவையில்லை, உள்ளக விசாரணைகளும் தேவையில்லை சர்வதேச விசாரணையே தேவையென 12 வருடமாக போராடி வருகின்றோம்.
எத்தனையோ ஆணைக்குழுக்கள் வந்தும் பதிவுகளை மேற்கொண்டு செல்கிறார்களே தவிர, எந்தவிதமான நீதியும் வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக அதே வேலையை தான் செய்கின்றார்கள். எங்களுக்கு நீதியே கிடைக்க வேண்டும்” என்றார்.