சொந்தக் காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை சம்பந்தன் எதிா்க்கிறாா் – விக்னேஸ்வரன்

“தனது சொந்தக் காரணங்களுக்காகத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதை சம்பந்தன் எதிர்க்கின்றார். அவர் தற்பொழுதும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்து வருகின்றார். அரச பெரும்புள்ளிகளின் தயவிலேயே அவர் அங்கு வாழ்கின்றார். சிங்கள வேட்பாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய தமிழரின் வாக்குகள் சிதறிப்போவதை இதனால்தான் அவர் எதிர்க்கின்றார்” என்று கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

இது தொடா்பாக விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையின் முக்கியமான பகுதிகள் வருமாறு –

“சம்பந்தன் துரதிஷ்டவசமாகத் தனது சொந்தக் காரணங்களுக்காகத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதை எதிர்க்கின்றார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வருங்காலம் பற்றி அவர் ஆழ்ந்து சிந்தித்தால், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி தேர்தலில் பங்கு பற்றவைப்பதே உசிதமான செயல் என்றுவிளங்கும்.

சம்பந்தன் தற்பொழுதும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்து வருகின்றார். அரச பெரும்புள்ளிகளின் தயவிலேயே அவர் அங்கு வாழ்கின்றார். சிங்கள வேட்பாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய தமிழரின் வாக்குகள் சிதறிப் போவதை இதனால்தான் அவர் எதிர்க்கின்றார். தமிழர்களின் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கூர்ந்து அவதானித்தாரானால் – தமிழரின் எதிர்காலம் பற்றி ஆழமாக சிந்திப்பாரானால் – தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைநிறுத்துவதை அவர் மனமார வரவேற்கவேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாா்.

“தமிழ் பொதுவேட்பாளர் தகமைகள் உடையவராக இருந்தால் பல நன்மைகளை தமிழ்மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பார். தமிழர்களின் அரசியல் பிரச்சுனை இன்றுவரை தீரக்கப்படவில்லை என்பதையும் எமது பிரச்சினை என்ன என்பது பற்றியும் மக்களுக்கும் மற்றைய நாட்டவர்களுக்கும் அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்லி வைக்கலாம். தமிழர்கள் எதைத் தீர்வாகப் பெற எத்தனிக்கிறார்கள் என்பது பற்றியும் அதற்கான காரணங்களையும் வெளிப்படையாக எடுத்துக் கூறலாம். தமிழ்ப் பேசும் மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டலாம். பேரம் பேசவரும் மற்றைய போட்டியாளர்களை எதைத் தருவீர்கள் என்று கேட்டு அவர்களை வெளிப்படையாக ஏற்க வைக்கலாம். இதற்கு ஏதேனும் ஒரு நாட்டின் இராஜதந்திரியை மத்தியஸ்தராக நிலைநிறுத்தி எழுத்தில் உடன்பாட்டைப் பெற்றபின் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித் தீர்மானிக்கலாம்” என்றும் நீதியரசா் விக்னேஸவரன் வலியுறுத்தியுள்ளாா்.