மைத்ரிபால மீது நம்பிக்கை வைத்திருந்தேன்! அவர் கட்சியை சீர்குலைத்து விட்டார் – சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிரந்தரமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கட்சியின் போசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபைக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கட்சியையும் நாட்டையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் “2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுமாறு அனைவரும் என்னிடம் கூறினார்கள். ஆனால் அதனை மறுத்த நான், பெரும் எதிர்பார்ப்புக்களுடன் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்தேன். ஆனால், மைத்திரிபால சிறிசேன கட்சி அரசியலமைப்பை முற்றாகக் குழப்பிவிட்டார். என்னை கட்சியிலிருந்து நீக்கியதாகவும், பின்னர் மீண்டும் நீக்கவில்லை எனவும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவர் உண்மையிலேயே அவர் ஒரு பைத்தியம்” என்றார்.