தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும்.

பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் 25.09.2020 அன்று சுகயீனம் காரணமாக காலமானார். அவர் தமிழீழ விடுதலைப் பாடல்கள் சிலவற்றை பாடியிருந்தார். அவர் பாடிய பாடல்களையும், பாடிய சந்தர்ப்பங்களையும் ஓவியர் புகழேந்தி அவர்கள் நினைவு கூர்ந்து எழுதிய நினைவுப் பதிவு ஒன்றை எமது இலக்கு இணையத்திற்காக பிரத்தியேகமாக அனுப்பியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை  தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை.  எப்படி அதை நான் செய்யமுடியும்” என்றேன்.  “அதனால் தான் அண்ணா, உங்களிடம் அப்பொறுப்பைக் கொடுக்கின்றோம்” என்றார்.

முதல் ஒலிப்பேழை – கடற்புலிகளுக்காக செய்தோம்.  கவிஞர் காசி ஆனந்தன் மூன்று பாடல்கள எழுதினார்.  புலவர் புலமைப்பித்தன் அவர்களை சந்தித்து, பல ஆண்டுகாலம் இயக்கத்துடன் விடுபட்டிருந்த தொடர்பை புதுப்பித்தேன்.  அவர் மூன்று பாடல்களை எழுதினார்.  (1. இது கடற்புலிப்படை, 2. மனித சுனாமி தான்.. 3. நாம் நீரிலும் வெடிக்கும் எரிமலைகள்).  கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு. வீரா., போன்றவர்களின் பாடல்களும் இருந்தன.

2 7 தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும். பாடல்கள் அனைத்திற்கும் அற்புதமான எழுச்சி மிகுந்த இசையை இசையமைப்பாளர் தேவேந்திரன் அமைத்திருந்தார்.  பாடல்களை, S.P பாலசுப்பிரமணியம், S.M. சுரேந்தர், திப்பு, கார்த்திக், T.L. மகாராசன், மனோ, சுஜாதா, கல்பனா, மாணிக்கவிநாயகம், சத்தியன், ஹரீஸ் ராகவேந்திரா போன்ற தமிழ்த்திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களை பாடவைத்தேன்.

“இத்தொகுப்பில் S.P பாலசுப்பிரமணியம் அவர்களை எப்படியாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி பொறுப்பாளரும் போராளியுமான சேரலாதன் என்னிடம் கேட்டபிறகு, புலவர் புலமைப்பித்தன் அவர்களிடம் செய்தியைக் கூறினேன். அவர் S.P.B அவர்களுடன் எனக்கு தொடர்பைத் ஏற்படுத்தித் தந்தார்.

அப்போது (2006-2007) S.P.B ஜெயா தொலைக்காட்சியில் குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சியை (என்னோடு பாட்டுப் பாடுங்கள்) நடத்திக்கொண்டிருந்தார். நானும் அந்நிகழ்வை தொடர்ந்து பார்ப்பதுண்டு. ஒரு இசைப் பேராசிரியர் வகுப்பு எடுப்பது போல் இருக்கும். “அந் நிகழ்வை பதிவு செய்து தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார். இசையைக் கற்றுக்கொள்பவர்களையும் இசையில் ஆர்வமுள்ளவர்களையும் பார்க்கச் சொல்வதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று பலரையும் பார்க்கச் சொல்லியிருக்கிறார். தலைவருக்கு மிகவும் பிடித்த நிகழ்வு” என்று சேரலாதன் என்னிடம் கூறியதோடு   எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களை சந்திக்கும் போது இதைக் கூறுங்கள் அண்ணா என்றார்.

முதல் ஒலிப்பேழைக்காக பாடல் பதிவுக்கு வந்தபோது சந்தித்தேன். அதுதான் முதல் சந்திப்பு. 21.06.2007 அன்று சாலிகிராமத்தில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. முதல் சந்திப்பு போல் இல்லாமல் பல நாட்கள் பழகியதுபோல் மிக இயல்பாக இருந்தது. சந்தித்த உடனே தலைவர் குறிபிட்டதாக சேரலாதன் கூறிய செய்தியைக் கூறினேன். மிகவும் மகிழ்ந்தார். “அவர் பார்த்து கருத்துக் கூறியது எனக்குப் பெருமை” என்றும் நெகிழ்ந்தார். இதை தலைவருக்கும் பகிர்ந்தேன்.

S.P. பாலசுப்பிரமணியம் ஒலிப்பதிவுக் கூடத்தில் என்னோடும் இசையமைப்பாளர் தேவேந்திரன் அவர்களோடும்  சில நிமிடங்கள் பொதுவான உரையாடலுக்குப் பிறகு தான் பாடவேண்டிய பாடல் வரிகளைக் கேட்டுப் பெற்று தான் கொண்டுவந்திருந்த ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதினார். மிகவும் வியந்து அதுகுறித்து அவரிடம் கேட்டேன் “திரைப்படப் பாடலாக இருந்தாலும் அல்லது தனி தொகுப்புப் பாடலாக இருந்தாலும் தன்னுடைய இந்த பதிவேட்டில் பாடல் வரிகள், எந்தத் தேதியில், யாருடைய இசையமைப்பில், எந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை எழுதி வைப்பது எனது வழக்கம்” என்று கூறினார்.

அதன் பிறகு பாடலின் இசைக்கோர்வையை தன்னுடைய Tape Recorder இல் பதிவு செய்து தரக்கூறி பாடலை அதனோடு இணைத்து ஒருமுறைக்குப் பலமுறைப் பாடிபார்த்தபிறகு பாடல் பதிவுக்குத் தயாரானார்.

அன்று அவர் பாடியப் பாடல் கவிஞர் கு.வீரா எழுதிய

“உலக மனிதம் தலைகள் நிமிரும்

விடுதலைப் போரின் வீரத்திலே”

என்றபாடல். அந்தப் பாடலை அவர் எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு வரிகளையும் உள்வாங்கி “உணர்வோடும் உண்மையோடும் கவித்துவத்தோடும் எழுதியிருக்கிறார்” என்று வீராவைப் பாராட்டினார். இசையைக் கேட்டபிறகு  தேவேந்திரனையும் பாராட்டினார்.

“எங்கள் மண்ணில் நாங்கள் வாழ

எவரும் தடுத்தல் சரிதானா

சொந்த மண்ணில் வாழும் உரிமை

எமக்கு என்ன கிடையாதா

குண்டை போட்டார் கூச்சல் போட்டோம்

எவரும் அதனைக் கேட்கவில்லை

குண்டை போட்டார் குண்டே போட்டோம்

கூடா தென்றால்  ஞாயமில்லை”

என்று சரணத்தில் வருகின்ற வரிகள் S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வரிகள். மிகவும் அற்புதமாக அப்பாடலை பாடினார். பாடி முடித்ததும் நானும் தேவேந்திரனும் அவரைப் பாராட்டினோம்.

‘எங்களின் கடல்’ தொகுப்பில் இறுதிப் பாடலாக அதை வைத்தோம்.

இரண்டாவதாக இம்ரான் பாண்டியன் படையணிக்காக ‘ஈட்டிமுனைகள்’ என்றத் தலைப்பில் ஒரு பாடல் ஒலிப்பேழையை தயாரித்தோம்.

அனுராதபுர விமானப்படைத் தளம் தாக்குதல் ‘எல்லாளன் நடவடிக்கை’ குறித்த ஒலிப்பேழை தொகுப்பையும் மூன்றாவது முறையாக தயாரிக்கும் பொறுப்பு என்னிடமே வழங்கப்பட்டது.  அத்தொகுப்பிற்கும் இசையமைபாளர் தேவேந்திரன் தான்.

“இத்தொகுப்பில், S.P பாலசுப்பிரமணியம் அவர்களை எப்படியாவது இரண்டு பாடல்களையாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்தார் சேரலாதன்.

“அள்ளித்தின்ற ஆனா எழுதிய – அன்னை மண்ணைக் கடக்கிறோம். அன்னியச் சேனை கோட்டை இருக்கும் அனுராதபுரத்திற்கு நடக்கிறோம்” என்ற யோ. புரட்சியின் பாடலையும்,

“வானத்திலேறியே வந்து வந்து குண்டு

போட்டவன் கோட்டையிலே – துட்ட

காமினிமுன்னர் எல்லாளனை வீழ்த்திய

கோட்டையின் வாசலிலே” என்ற புதுவை இரத்தினதுரையின் பாடலையும் S.P பாலசுப்பிரமணியம் மிக அற்புதமான உணர்ச்சிகளோடும், சங்கதிகளோடும் அவருக்கே உரிய தனித்துவத்தோடும் பாடியிருந்தார்.

இதே காலகட்டத்தில் எல்லாளன் திரைப்படப் படப்பிடிப்பு தமிழீழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அத்திரைபடத்திற்கான அண்ணன் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய

“தாயக மண்ணே! தாயக மண்ணே!!

விடைகொடு தாயே! விடை கொடு

தலைவனின் தேசப் புயல்களுக்காக வழிவிடு தாயே! வழிவிடு”

என்ற பாடலை எனக்கு அனுப்பிய சேரலாதன், உடனடியாக தேவேந்திரன் அவர்களை இசை அமைக்கச் செய்து, S.P பாலசுப்பிரமணியம் அவர்களை பாடவைத்து அனுப்பி வையுங்கள் அண்ணா” என்றார், சேரலாதன்.

அண்ணன் கவிஞர் புதுவை இரத்தினதுரை, பாடல் காட்சிப்படுத்தலுக்கு ஏற்ற வகையில் இசைக்கோர்வை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் பிற விடயங்கள் குறித்தும் நீண்ட நேரம் என்னிடம் கைபேசியில் உரையாடினார். அன்பைப் பொழிந்தார். நெகிழ்ந்தார். அதன் பிறகு அவரோடு தொடர்பே இல்லை.

அப்பாடல் தொகுப்பிற்கு இடையில் இப்பாடலையும் இசையமைத்து, S.P.B அவர்களைக் கொண்டு பாடச்செய்து உடனடியாக அனுப்பினேன்.  மிகவும் அற்புதமாக அப்பாடலை S.P.B பாடியிருப்பார்.  புதுவையின் வரிகளுக்கு ஏற்ற இசையை தேவேந்திரன் கோர்த்திருந்தார்.  காட்சிப்படிமங்களாக விரியும் அந்த இசைக்கான வரிகளுக்கு S.P.B  தன் குரலால் உயிர் கொடுத்திருந்தார்.

அந்தப் பாடலில் இருந்த உயிர்த்துடிப்பு மிக்க காட்சிப் படிமங்கள் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

காற்றும் தமிழும் உள்ளவரை அவரும் வாழ்வார்.

-ஓவியர் புகழேந்தி-