ஆசிய நாடுகளுக்கு விற்கப்படும் ரஸ்யாவின் எண்ணெய்

உக்ரைன் மீதான படை நடவடிக்கையை தொடர்ந்து ரஸ்யா மீது மேற்குலகம் கொண்டுவந்த பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஸ்யா தனது எரிபொருள் விற்பனையை ஆசிய நாடுகளை நோக்கி அதிகப்படுத்தியுள்ளது.

ரஸ்யாவிடம் இருந்து அதிக எரிபொருட்களை கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது அந்த வரிசையில் மியான்மாரும் இணைந்துள்ளது.

எதிர்வரும் செப்பரம்பர் மாதம் முதல் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மார் ரஸ்யாவில் இருந்து எரிபொருட்களை நேரிடையாக கொள்வனவு செய்யவுள்ளதாக அந்த நாட்டின் தலைவர் மின் ஆங் ஹிலைங் தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களை ரஸ்யாவில் இருந்து கொள்வனவு செய்வது, சேமிப்பது, விநியோகம் செய்வது தொடர்பில் 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் தலைவர் கடந்த மாதம் ரஸ்யாவுக்கு சென்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது என அரச பேச்சாளர் சோவ் மின் ருன் தெரிவித்துள்ளார்.

ஆனால் மியான்மாருக்கு ரஸ்யாவில் இருந்து எரிபொருட்கள் எந்த பாதையால் செல்வம் என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சீனா அல்லது இந்தியா ஊடாக செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்றது.