பல்துறை பாதிப்பிற்கும் வித்திட்டுள்ள ரஷ்யா – உக்ரைன் மோதல்

390 Views

ரஷ்யா - உக்ரைன் மோதல்

ரஷ்யா – உக்ரைன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா போன்ற துறைகள் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ளன. தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் வேலை நாள் பாதிப்பு  என்பவற்றுக்கும் உந்து சக்தியாகியுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் கல்வித் துறைத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,  “ரஷ்யா, உக்ரைன் மோதல் உக்கிரமடைந்து வருகின்றது. இம்மோதலில் இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கான படையினரும், பொதுமக்களும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இம்மோதலினால்  உலகளாவிய ரீதியில் ஒரு பதட்டநிலை ஏற்பட்டு வருவதோடு இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றன.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதித் துறையும் இதனால் வீழ்ச்சி கண்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.இலங்கை  உலகின் பல நாடுகளுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்யும் நிலையில் ரஷ்யா உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகளவான தேயிலையை ஏற்றுமதி செய்கின்றது.

இதனடிப்படையில் 1990 இல் 52.04, 2000 இல் 53.2, 2010 இல் 56.12, 2013 இல் 68.39 வீதமான தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாகவே ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி இடம்பெறுகின்றது. இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் மோதலால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாதித்துள்ள நிலையில் அந்நியச் செலாவணி வருமானத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஏற்கனவே டொலர் பற்றாக்குறைக்கு மத்தியில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. இதனால் நாட்டு மக்களும் பொருட் கொள்வனவு, விலைவாசி அதிகரிப்பு என்பவற்றில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேயிலை ஏற்றுமதித்துறை வீழ்ச்சியானது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இதேவேளை தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்திலும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமையும்.

உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி ஏற்கனவே அல்லல்படும் இம்மக்கள் வருமானப் பற்றாக்குறை காரணமாக வாழ்க்கைத் தரத்தில் கீழ்நிலைக்குச் செல்லும் நிலைமை உருவாகும். அத்தோடு தொழிலாளர்களின் வேலை நாட்களும் குறைவடையும் அபாயமுள்ளது. இதனால் பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் கல்வி, சுகாதாரம், சமூக அந்தஸ்து எனப் பல்வேறு துறைகளிலும் இம்மக்கள் பின்னடைவு காணவேண்டியேற்படும்.

இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானத்தில் சுற்றுலாத்துறை முக்கிய இடம்பெற்று விளங்குகின்றது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து வருடா வருடம் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான மோதல் நிலைமையால் இலங்கைக்கு சுற்றுலா மூலமாகக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானமும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளது.

இது இலங்கைக்கு ஒரு பலத்த அடியாகும். ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையின்றி பாதிப்பினை எதிர்நோக்கிய நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகக் காணப்படுகின்றது. கொரோனாவின் தீவிரம் தற்போது ஓரளவு தணிந்துள்ள நிலையில் அண்மைக் காலமாக படிப்படியாக சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையில் அதிகரித்திருந்தது. இதற்கும் மத்தியில் தற்போதைய ரஷ்யா, உக்ரைன் மோதலால் மீண்டும் இலங்கை சுற்றுலா பயணிகளின் விடயத்தில் பாதக விளைவுகளை எதிர்கொண்டுள்ளது. இதனால் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியும் கேள்விக்குறியாகியுள்ளது.

நாடுகளுக்கிடையில் மோதல் நிகழும்போது எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பதும், தட்டுப்பாடு ஏற்படுவதும் இயல்பாகும். இந்த வகையில் ரஷ்யா, உக்ரைன் மோதலால்  உலகளாவிய ரீதியில் எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதையும், எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும்  அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கையும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை.

எரிபொருள் பிரச்சினை காரணமாக  போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு என்பவற்றுக்கு இலங்கையர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால், ரஷ்யா, உக்ரைன் மோதலானது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ள நிலையில், சகல துறைகளிலும் தாக்க விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளது” என்றார்.

Tamil News

Leave a Reply