சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானிய எம்.பி.பகிரங்க கோரிக்கை

291 Views

சவேந்திர சில்வாவை தடை செய்ய

சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானிய எம்.பி.பகிரங்க கோரிக்கை

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானியாவின் Earling மற்றும் Southall பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான விரேந்திர சர்மா (Mr. Virendra Sharma MP)விசேட காணொலி மூலம் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தற்போது இலங்கையில் தொடரும் சித்திரவதைகளிற்கும் காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

போர்க்குற்றங்களிற்காக சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த வருடம் அமெரிக்கா பயணத்தடை விதித்தது போன்று பிரித்தானியாவும் தங்கள் மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் கீழ் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தியதுடன், இது பொறுப்புக்கூறல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்பதோடு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் கடப்பாட்டினை உறுதிப்படுத்துவதாகவும் இருக்குமென விசேட காணொலி மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

ITJP மற்றும் ICPPG ஆகிய மனித உரிமை அமைப்புக்களால் கடந்த வருடம் சவேந்திர சில்வா தொடர்பான யுத்தகுற்ற ஆதாரங்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து இராஜதந்திர சந்திப்புக்களை நடாத்தி ஆதரவு திரட்டிவருவது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில், பாதிக்கப்பட்டவரான சயிலேசன் சிதம்பரநாதன் ஏற்பாட்டில், மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் அண்மையில் விரேந்திர சர்மா அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் விளைவாகவே அவரின் ஆதரவு பெறப்பட்டது.

Tamil News

Leave a Reply