இலங்கை தமிழர் முகாமில் அனைவருக்கும் வீடு கட்ட ரூ.317 கோடி நிதி ஒதுக்கீடு: எம்எல்ஏ கேள்விக்கு தமிழ்நாடு அமைச்சர் பதில்

இலங்கை தமிழர் முகாமில் அனைவருக்கும் வீடு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மாதவரம் தொகுதி (எம்எல்ஏ) சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.சுதர்சனம் (திமுக) பேசுகையில், ‘மாதவரம் தொகுதிக்குட்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் கூட அங்கே ஆய்வு செய்து, சிதலமடைந்த குடியிருப்புகளை உடனடியாக செய்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து வந்தார்.

ஏறக்குறைய 800 குடும்பம் வாழும் அந்த பகுதி இலங்கை தமிழ் அகதி மக்களுக்கு நாங்கள் நல்லதை செய்து தருகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தார். அதை உடனடியாக செய்து தர வேண்டும்,’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசுகையில், ‘மன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கை நியாயமானது. முதல்வரின் உத்தரவின் பேரில்தான் தமிழகத்திலுள்ள 106 முகாம்களை நேரடியாகத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை வைத்து ஆய்வு செய்தோம்.

முதல்வரிடம் வந்து சொன்னவுடன், உடனடியாக அதனை ஏற்பாடு செய்யுங்கள் என்று முதல்வரே முகாமிற்கு வெளியே இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கு அந்த கொரோனா நிதியும் கொடுத்தார். இலங்கை அகதிகள் முகாமில் இருக்கின்ற அனைவருக்கும் வீடு கட்டுவதற்காக முதல்வர் ₹317 கோடி நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். அதில் தேவையான அளவிற்கு அனைத்து வசதி வாய்ப்புகளுடன் உடனடியாக அங்கே வீடுகள் கட்டித் தரப்படும்,’ என்றார்.

Tamil News