செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக,உக்ரைன் எச்சரித்துள்ளது.
உக்ரைன் அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான எனர்கோவடோம் (Energoatom) நிறுவனம், செர்னோபிள் அணுமின் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை குளிர்விக்க முடியாது என்பதால், அங்கு கதிர்வீச்சு கசிவு ஏற்படலாம் என்றும் அந்நாடு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, டெலிகிராம் செயலியில் அந்நிறுவனம் வெளியிட்ட பதிவில், இரு வாரங்களுக்கு முன் செர்னோபிள் அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றிய போது ஏற்பட்ட சேதத்தால், அணுமின் நிலையத்திற்கு செலுத்தப்படும் உயர் மின்னழுத்த இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அணுமின் நிலையத்தின் கண்காணிப்பு தகவல்களை உக்ரைனால் அணுக முடியாது எனவும், இதனால், அங்கு கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய முடியாது எனவும், உக்ரைனின் எரிசக்தித்துறை அமைச்சர் ஜெர்மன் கலூஷ்சென்கோ தெரிவித்துள்ளார்.
செர்னோபிள் அணுமின் நிலையத்திலிருந்து கண்காணிப்பு தகவல்களை பெறுவது நின்றுவிட்டதாக, சர்வதேச அணுசக்திக் கழகம் முன்னதாக தெரிவித்திருந்தது. மேலும், கடந்த இரு வாரங்களாக அந்த அணுமின் நிலையத்தில் உள்ள சுமார் 210 பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்ததாகவும் அந்த அமைப்பு எச்சரித்திருந்தது.
நன்றி பிபிசி