அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமையை மதிக்கவும் – சர்வதேச மன்னிப்புச் சபை

பொது இடங்களில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்குமாறும், அமைதியான எதிர்ப்பாளர்களைக் கலைப்பதற்கு அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, போராட்டத் தளமான ‘கோட்டா கோ கம’ வை காலி செய்யுமாறு காவல்துறையினரின் அறிவிப்பு தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஏற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களின் ஒடுக்குமுறையின் தீவிரம் குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பயன்படுத்தியதற்காக மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இலங்கை அதிகாரிகள் உடனடியாக விடுவித்து கைவிட வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் நிறைவேற்றவும், மக்கள் தங்கள் மனித உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அந்த அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.