ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகல்

ஐ.நா அமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களின் மீதான ஓட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகியே இருந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் போரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாகவும், ரஷ்யாவின் நடவடிக்கையால் சர்வதேச மனிதாபிமான சட்ட விதிமுறைகள் மீறப்படுவதாகவும் உக்ரைன் போருக்கான சர்வதேச ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது.

உக்ரைனிலிருந்து ரஷ்யப் படைகள் விரைவில் வெளியேற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆணையம் கடந்தாண்டு அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் அதிகாரத்தை ஓராண்டு நீட்டிக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் நேற்று நடந்தது. 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உட்பட 17 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகின.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியா, ‘‘போரில் அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதி செய்ய வேண்டும்’’ என்றது.

‘‘உலகளாவிய ஒழுங்கு, சர்வதேச சட்டம், ஐ.நா விதிமுறைகள் அடிப்படையிலானது. இந்த விதிமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும். உக்ரைன் போரில் அப்பாவி மக்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. உக்ரைன் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என ஐ.நா. மனித உரிமை கவுன் சிலுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பவான் பாதே தெரிவித்துள்ளார்.