வடக்கு-கிழக்கு, தெற்கு சிவில் சமூக அமைப்புக்களின் சிறிலங்காவின் தற்போதைய நெருக்கீட்டு நிலை தொடர்பான அறிக்கை

32 சிவில் அமைப்புக்களின் கூட்டறிக்கை

வடக்கு-கிழக்கு, தெற்கை சார்ந்த 32 சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து கடந்த 19.4.2022 அன்று சிறிலங்காவின் தற்போதைய நெருக்கீட்டு நிலை தொடர்பில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,

தற்போதைய பொருளாதார அரசில் நெருக்கீட்டு நிலமை அனைவரையும் பாதிக்கின்றது.

கீழ்க் குறிப்பிட்ட சிவில் அமைப்புக்களாகிய நாங்கள் தற்போது சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கீட்டு நிலமை தொடர்பில் மிகுந்த கவலை மட்டுமல்ல அக்கறையும் கொண்டுள்ளோம். வேறு அறிக்கைகளில் குறிப்பிட்ட படி, இந்நிலைமை இன்னும் மோசமடையும் சூழல் காணப்படுகின்றது, அது தீர்க்கப்படும் வரை. இவ்வாறான நிலைமையை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா இன்னும் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளவில்லை. ஏனெனில் அவ்வாறான பட்டறிவு சிறிலங்கா வரலாற்றில் பதிவாகவில்லை. தற்போதைய நெருக்கடி எல்லாரையும் இனம், மதம், மொழி கடந்து பாதிக்கின்றது என்பது உண்மையானாலும் சிறிலங்காவில் இன அடிப்படைவாத அடக்குமுறை பெரும்பான்மையினத்தவர் அல்லாதோர்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டு தொடர்வதில் எவ்வித மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. மேற்குறிப்பிட்ட விடயம் சிறிலங்காவை பல தசாப்பதங்களாக பீடித்து வருகின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை. தற்போது ஒருமைப்பாட்டின் தேவை எழுந்துள்ளது என்ற கோரிக்கைகள் ஆங்காங்கே எழுந்தாலும் ராஜபக்சே குழுவினரும், பெரும்பான்மையினரும் தமிழ் மக்கள் மீதான இராணுவ வெற்றியில் ஒன்றுபடுகின்றனர். பெரும்பாலானவர்கள் இந்த ‘வெற்றி உளப்பான்மைதான்’ ராஜபக்சே ஆட்சியாளர்களுக்கு சனநாயக நடவடிக்கை மூலம், அதிக அதிகாரத்தையும், பலத்தையும் கொடுத்தது என்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவ்வாறாக கொடுக்கப்பட்ட அதிகாரம், ராஜபக்சே குழுவினரை பொறுப்புகூறல் பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக கட்டமைத்தது.

சனநாயகம்: நாடாளுமன்றம், அடைக்குமுறைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு

ஆரம்பத்தில் மக்கள் தங்களுடைய பொருளாதார நெருக்கடி நிலமை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே ராஜபக்சே குழுவினருக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்தார்கள். அப்போராட்டத்தின் 2ம் நிலையாக, ஆட்சிமாற்றம் பற்றிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ன, 3ஆவது நிலையில் அரசியல் மாற்றம் பற்றிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. உதாரணத்திற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான தடைச்சட்டத்தை இல்லாமல் செய்வது, நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிப்பது, நாடாளுமன்றத்தை அதிக அதிகாரம் கூடிய அலகாக மாற்றுவது போன்றன. அரசியல் அமைப்பிற்கூடாக கட்டமைப்பு மாற்றங்களை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அது போலவே பொறுப்புக் கூறல் தொடர்பில், குறிப்பாக இலஞ்சம், ஊழலுக்கு எதிராக.  கலந்துரையாடல்களையும் கோரிக்கைகளையும் நாம் நேர்மறையான குறியீடுகளாகவே கணிக்கின்றோம். இக்கோரிக்கைகளும் கலந்துரையாடல்களும் தக்கவைக்கப்பட வேண்டும் என்பதே எமது அவாவும் கூட. எங்களுடைய நம்பிக்கை யாதெனில், பொறுப்புக்கூறல் வெறுமனே இலஞ்சம், ஊழலுக்கு எதிரானது மட்டுமல்ல பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிரானதாகவும் தக்கவைக்கப்படவேண்டும். பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொறுப்புக் கூறலை தனி உதிரிகளுக்கு எதிரானதாக மட்டும் வடிவமைக்காமல் தனித்துவம் மிக்க இனக்குழுமத்திற்கு எதிரானதாக வரலாற்றில் நடந்ததையும் உள்வாங்க வேண்டும்.

தற்போதைய நிலையில், போராட்டங்கள் இத் தீவின் முழுவதற்குமே பரவுகின்றதான தோற்றப்பாடு உள்ளது. இத்தீவில் வாழுகின்றவர்கள் வரலாற்றை மீட்டிப்பார்ப்பதை தவிர்க்கமுடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றார்கள். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் மக்கள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியதை நாங்கள் அறியாமல் இல்லை. அதற்கு உதாரணங்களாக, வடக்கு-கிழக்கில் எழுந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் அரசு வன்முறையை பாவித்து அடக்கியதை அறியாதார் யாரும் இல்லை. அது போல் தெற்கிலும் சுதந்திர வர்த்தக வலயத்தில்,ரத்துபுசலாவையில், மீனவர் போராட்டங்கள், கண்டி- திகன போன்றவற்றையும் குறிப்பிடலாம். ராஜபக்சே குழுவினர் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்காக வன்முறையை கையில் எடுத்தது வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடக்கு – கிழக்கில் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள், உத்திகள், தெற்கிலும் பயன்படுத்தப்படலாம் என்கின்ற அச்சம் எமக்கு இருக்கின்றது. உதாரணத்திற்கு அரச படை கட்டுமானம் பயன்படுத்தப்படலாம். மகிந்த ராஜபக்சவினுடைய அண்மைய உரை இதை ஓரளவிற்கு கோடிட்டுக் காட்டுகின்றது. அவர் 70ம், 80ம் ஆண்டுகளில் சிங்கள ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் போராட்டம் அடக்கப்பட்டது பற்றியும், தமிழ் மக்களின் போராட்டம் அடக்கப்பட்டது பற்றியும் தனது உரையில் மீட்டது குறிப்பிடத்தக்கது. போராடுவதற்கான உரிமை சனநாயகத்தின் அடிப்படை பண்பு சார்ந்தது. இது குற்றமல்ல. சனநாயகத்தை மக்கள் போராட்டங்கள் இன்னும் பலப்படுத்துமே ஒழிய பலவீனப்படுத்தாது. சனநாயகத்தை வெறுமனே நாடாளுமன்றத்திற்கு மட்டும் வரையறுத்துக்கொள்பவர்கள் சனநாயகத்தை ஏளனம் செய்வதோடு அல்லாமல் மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் மறுக்கின்றார்கள்.

மக்கள் போராட்டங்களை குற்றமாக்குதல்: அடக்குமுறைக்குட்பட்ட மக்களுடைய பொது அனுபவம்

தற்போதைய பொருளாதார-அரசியல் நெருக்கீட்டுக்கு, அதன் அடைப்படை காரணியைக் கண்டு தீர்வைப்பெற்றுக் கொள்வதே, நிரந்தரத் தீர்வைப் பெற்று தரும். பழிசுமத்தும் அரசியல் விடையாட்டை மிக அண்மையில் தனது உரையில் மகிந்த ராஜபக்சே பயன்படுத்தி இருப்பதை நாம் அறிவோம். போராட்டக்காரர்களால் தான் நாடு இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என போராட்டக்காரர்கள் மீது பழிசுமத்தி அவர்களை பலிக்கடாக்களாக முயற்சிக்கின்றார். அவருடைய கூற்றுப்படி போராட்டக்காரர்களால்தான் நாடு அந்நியச்செலாவணியை இழக்கின்றது. இராணுவ வெற்றியையும், இனவாதத்தையும் பயன்படுத்தி தேசிய இனக்குழுமங்களை ஆட்சியாளர்கள் துருவமயப்படுத்தியுள்ளார்கள்.

மகிந்த ராஜபக்சே தமிழர்களை மட்டும் குற்றம்சுமத்தவில்லை. சிங்கள ஒடுக்கப்பட்ட வர்க்கத்தையும், 70துகளிலும் 80களிலும் அடக்குமுறைக்கு எதிராக எழுந்ததினால் குற்றம்சுமத்துகின்றார். மேட்டுக்குடி நாடாளுமடன்ற பொறிமுறையை அதி உயர் கட்டமைப்பாக காட்டி, வடக்கு – கிழக்கிலும், தெற்கிலும் மக்கள் போராட்டங்களை குற்றமாக கட்டமைக்கின்ற அரச பொறிமுறை அமுலில் இருக்கின்றது. ஆயுத போராட்டத்தை பாரிய மனித படுகொலைக்கான காரணமாக காட்டிக்கொண்டு, அரச படைத்தரப்பையும், ராஜபக்சே குழுமத்தையும் அவர்களுடைய குற்றங்களில் இருந்து கழுவ முயல்வதை தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்கள் செய்து வந்தன.

அடக்குமுறை அரசும், ஆட்சியாளர்களும் பழியைத்தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தின் மீதே சுமத்தி வந்தன. போராட்டவழிமுறைகள் பற்றி கவலைப்பட்டதாக இல்லை. வன்முறையற்ற போராட்டத்தின் மீதும் ஆயுதப் போராட்டத்தின் மீதும், அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நாம் இங்கு ஒரு கருத்தை வழியுறுத்தவிரும்புகின்றோம். 1971,1987-89 களில் சிங்கள ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு எதிராக அரசு புரிந்தது மானிடவியலுக்கு எதிரான குற்றம், ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை பல தசாப்தங்களாக புரிந்து வந்துள்ளது. அதன் உச்சகட்டமாகவே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை அமைந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஒற்றையாட்சி அரசை பாதுகாக்கவே நடத்தப்பட்டது என்பதையும் மறுக்கமுடியாது. வௌ;வேறு இனக்குழுமங்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் உள்ள தனித்துவத்தை அடையாளப்படுத்துவதோடு, இனவாதத்திற்கும், சர்வதிகார ஆட்சிக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதின் அவசியத்தையும் உணர்கின்றோம்.

தமிழருக்கு எதிரான போரும், அனைவருக்கும் எதிரான பொருளாதாரப் போரும்

ராஜபக்ச குழுவினருடைய ‘போர் வெற்றி’ சொல்லாடல் இது வரைக்கும் தெற்கில் சிக்கலுக்கு உட்படுத்தப்பட்டு சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை. இராணுவ வெற்றியை இறுதி ஆயுதமாகப்பயன்படுத்தி, தெற்கில் தனக்கு சார்பான ஆதரவு அலையை ராஜபக்ச குடும்பம் திரட்டி வந்திருக்கின்றது. படைக்கட்டுமானம் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நகர்வை முன்னெடுப்பதற்காக மேன்மைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

பெரும்பான்மை இனத்தை, அவர்களுடைய இராணுவ வெற்றியைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட ‘மேலாதிக்கப் புனைவு’ தற்போது செயலிழந்து வருகின்றது கண்கூடு. போரில் வென்றமைக்காக படைக்கட்டுமானத்தை மேன்மைப்படுத்தலும், அடக்குமுறைக்கு உட்படுத்தப்படும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று முரணானது. அதிகாரத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் எல்லாமே படைக்கட்டுமானத்தை மக்களின் போராட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள், வடக்கு – கிழக்கு, தெற்கு உட்பட. படைக்கட்டுமானம் ஆட்சியாளர்களினதும், அரசினதும் நலன்களையே முன்னிறுத்தி வந்துள்ளது.

இனப்பாரபட்ச கொள்கைகளும், நடவடிக்கைகளும் ‘தமிழ் மற்றமையை’ இத்தீவில் அடக்குமுறைக்கு உட்படுத்தி வந்ததனால், தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. அவ்வாயுதப் போராட்டத்திற்கு எதிராக சிங்கள அரசு பெரும் போரைத் தமிழர் மீது திணித்து பல இலட்சக்கணக்கான உயிர்களைக் கொன்றும், இன்னும் பல கோடிக்கணக்கானோரை வலிந்து இடம்பெயர செய்துள்ளது. ஒடுக்கப்பட்டசிங்கள வர்க்கத்தினரின் போராட்டமும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டது. தற்போதைய நெருக்கீட்டுக்கு மக்கள் போராட்டம்தான் காரணம் எனக் கூறுவது தற்போதைய ஆட்சியில் உள்ள ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக அமைக்கின்றது. மேற்கூறப்பட்டவைத்தான் இனவாத அடக்குமுறைக்கு காரணமாய் அமைகின்றன, அது இத்தீவின் வரலாற்றோடு ஒன்றிணைந்துள்ளது. இந்த இனவாத கருத்தியல் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்கள் மீது, சேறாக பூசப்பட்டு தெற்கில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் போராட்டங்களை நசிக்கி வந்துள்ளது. இந்த இனவாத கருத்தியலையும் ஒற்றையாட்சி தன்மையையும் தெற்கில் தக்கவைக்கும் வரைக்கும் மக்கள் தங்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றுவதற்கு வழியேற்படுத்திக்கொடுக்கின்றார்கள்.

தொடர்ந்து வந்த அரசியலமைப்பு மாற்றமும், அதன் சரத்துக்கள் மாற்றமும் பெரும்பான்மையினரின் நலன்களை முன்னிறுத்தியே கொண்டுவரப்பட்டது, முதன்மையாக பெரும்பான்மையினரல்லாத ஏனைய தேசக்குழுக்களை அடக்குவதற்காக இன்னமும் குறிப்பாக தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்காக. அரசின் அடிப்படைத் தன்மை இதன் ஊடாகத்தான் திட்டமிடப்படுகின்றது அல்லது வரையறுக்கப்படுகின்றது. சிங்கள வாக்காளர் குழுமம் சிறிலங்கா அரசின் ஒற்றையாட்சிப் பண்புகளால் வடிவமைக்கப்படுகின்றது. அதுவே இத்தீவின் வளங்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும், முகாமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றது. மேற்கூறப்பட்டவை ஆட்சியாளர்களுக்கு அரசியல் – பண்பாட்டுவெளியை உருவாக்கி சிங்கள பொதுப்புத்தியை திரிபு படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்கி, பெரும்பான்மையினரை அரசியல் இலஞ்சம், ஊழல் தொடர்பில் அலட்சியத்தனம் காட்டுகின்ற போக்கை உருவாக்குகின்றது. அடிப்படையில் நாம் அரசியல் கட்டமைப்புக்கும், பொருளாதார நெருக்கீட்டுக்கும் இடையே இருக்கின்ற தொடர்பை விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழர்களின் சுய நிர்ணய உரிமை கோரிக்கையும் இத்தீவின் இறைமையும்

தமிழ் மக்களுடைய நேர்மையான அரசியல் அபிலாசைகளும், அரசியல் கோரிக்கைகளும் இத்தீவின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமையப் போவதில்லை, மாறாக இத்தீவின் இறைமையை வலுப்படுத்துகின்றது. இறைமையின் அதியுயர் தருணமாக 2002ல் நடந்த சமாதான முன்னெடுப்புக்களில் ‘பகிரப்பட்ட இறைமை’ முன்மொழிவில் உருவாக்கப்பட்ட அரசியல் வெளியைக் குறிப்பிடலாம்.. இவ்வரசியல் வெளி இத்தீவில் தேசிய இன குழுமங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது. ‘பகிரப்பட்ட இறைமை’ முன்மொழிவு ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை, இத்தீவு இராணுவரீதியில் போர்த்திறன் சார்ந்து ஏனைய நாடுகளின் பலப்பரீட்சைக்கு களம் அமைப்பதை மாற்றி அமைத்திருக்கும். இன்னும் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படாத உண்மையாக இருக்கும் போர் வெற்றிக்குப் பின்னால் உள்ள அரசியல் உற்று நோக்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை அமெரிக்க வேண்டுகோளிற்கு இணங்க தடைசெய்யாது விட்டிருப்பின், இராணுவ போர் வெற்றிக்காண சந்தர்ப்பம் கட்டமைக்கப்டாமலேயே போயிருக்கலாம்.

போரை வெற்றிகொள்வதற்கான மூல வரைபடம் அமெரிக்க பசுபிக் கட்டளைத் தலைமையின் கீழ் 2002 ல் திருகோணமலைத் துறைமுகத்தில் உருவாக்கப்பட்டது. இதற்காக அந்த அலகு திருகோணமலை துறைமுகத்தில் ஏறக்குறைய ஒரு மாதம் தங்கியிருந்ததை நினைவுபடுத்த வேண்டும். சிறிலங்கா, அமெரிக்காவுக்கும், சீனாவிற்கும் இடையேயான பலப்பரீட்சைக்களமாக மாற்றப்பட்டுள்ளது, இந்தியா அமெரிக்காவுக்கு சார்பாக செயற்படுகின்றது. சிறிலங்காவின் சுதந்திரம் பகிரப்பட்ட இறைமையினூடு மாத்திரமே சிங்கள – தமிழ் தேச இனங்களுக்கிடையே தக்கவைக்கப்படலாம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற்றிருப்பின், தற்போதைய பொருளாதார – அரசியல் நெருக்கடிகள் எழுந்திருக்க வாய்ப்பில்லை. ராஜபக்ச குழுமம் இறையாண்மை பத்திரங்களை போரின் உச்சக்கட்டத்தில் ஏனைய நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்டதையும் மறக்கமுடியாது. தமிழர் மீதான படுகொலைகளுக்கு எவ்வாறு பொறுப்பு கூறாமல் விலகியிருந்தார்களோ அதே போல் சர்வதேசத்திடம் இருந்து கடன் வாங்கிய பொறுப்புக்கூறலில் இருந்தும் விலகியிருந்தார்கள். அதனால்தான் இன்று இத் தீவு கடன் தீர்க்கவியலாமையில் மூழ்கியிருக்கின்றது. பிள்ளைகள் குடிப்பதற்கு பால் மா இல்லை, நோயாளிகளுக்கு மருந்து இல்லை, இன்னும் பிற.

தமிழரைப் பொறுத்தவரையில் கட்டமைடப்பு மாற்றத்திற்கான கோரிக்கை என்பது ஒற்றையாட்சியின் முதன்மைப் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். சிறிலங்கா பல்தேச சனநாயக மாதிரியை உள்வாங்க வேண்டும். தமிழர் தனித்துவமான அடையாளத்தை கொண்டவர்கள் என்பதோடு பராதீனபடுத்தவியலாத சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். தமிழர்களின் இறைமை புவிசார் மூலோபாய நகர்வுகளுக்காகவோ, புவிசார் அரசியல் நகர்வுகளுக்காகவோ சமரசம் செய்யப்பட முடியாததது. இத் தீவின் ஒற்றையாட்சி முறைமை, அமெரிக்க-ஐக்கியராச்சிய இராணுவ மூலேபாய நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தமிழர்களின் அடக்குமுறை எதிர்ப்பு போராட்டங்களே மேற்கூறிய அமெரிக்க – ஐக்கிய ராச்சிய இராணுவ மூலோபாய நகர்வுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ளது.

சிறிலங்கா மதச்சார்பற்ற நாடாக விளங்க வேண்டும். மதச்சார்பற்ற நாட்டில் எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். சமய சார்பற்ற நாடு எனக்குறிப்பிடுவது சமயங்களுக்கு எதிரான கொள்கைககை; கொண்டதாக இல்லை, அவ்வாறான அணுகுமுறை ஐரோப்பிய மைய சிந்தனை கொண்டது. இங்கு குறிப்பிடுவது, இந்திய அரசியல் அமைப்பு அறிவு சார்ந்து பன்மைத் தன்மையை உள்வாங்குதல். இதுவே அனைத்து சமயங்களிலும் உள்ள மரபுகளையும் விழுமியங்களையும் ஒருங்கிணைக்கின்றது. ஒற்றையாட்சியின் கீழ் மதத்தின் அடிப்படைவாத அலகு விடுதலை கருத்தியலுக்கு எதிராக ஆதரிக்கப்பட்டு வந்துள்ளது. சமய சார்பற்ற பன்மைத்துவ அரசு மட்டுமே நாட்டை மதவெறியில் இருந்து நாட்டைக்காப்பாற்ற முடியும்.

தற்போதைய வரலாற்றுத்தளம், ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தந்துள்ளது. இச் சந்தர்ப்பத்தில் மக்கள் தங்களுடைய இறைமையை மீள வலியுறுத்தி, இறைமை மக்களிடமே உள்ளது என்பதை ஆணித்தரமாக கூறுகின்றனர்.

இராணுவமயமாக்கமும் பொருளாதார நெருக்கீடும்

இத்தீவின் பல்வேறு கோணங்களில் இருந்தும் இலஞ்சம், ஊழல் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மிக ஆழமாக வலியுறுத்தப்படுகின்றது, இலஞ்சம், ஊழலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வரலாற்றிலே வந்த ஆட்சியாளர்கள் எல்லாருமே வடக்கு- கிழக்குப் போருக்காக தேசியப் பாதீட்டில் பெரும் சதவீதத்தை ஒதுக்கியிருந்தனர். போரின் போர்வையில் இலஞ்சம்,ஊழல் அரசியல் பண்பாடாக உருவாக்கப்பட்டது. இராணுவ வெற்றியின் பின்னரும் ஆட்சியாளர்கள் பாதீட்டின் பெரும் சதவீதத்தை தொடர்ந்தம் தேசியப்பாதுகாப்புக்காக ஒதுக்கியிருந்தனர். மேற்குறிப்பிட்ட பணம் உண்மையில் மக்களின் பசியாற்றப்பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஈழத்தமிழர்கள் இராணுவமயமாக்கம் நீக்கப்பட வேண்டும் என பல காலமாக கோரி வருகின்றனர். தொடர்ந்தும் தேசியப்பாதுகாப்புக்காக, படைக்கட்டுமானத்திற்காக தேசியப்பாதீட்டில் ஒதுக்கப்படும் சதவீதம் குறைக்கப்பட்டு, நாட்டையும் அதன் வளத்தையும் ஏனைய நாடுகளுக்கும், பல்தேசிய வணிக நிறுவனங்களுககும் விற்பதை விட்டு மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இலஞ்சம், ஊழல் தொடர்பிலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் பொறுப்புக்கூறலினூடு தண்டிக்கப்பட்டு நீதி வேண்டும் எனக் கோருபவர்கள், தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட படுகொலைக்கான பொறுப்புக்கூறலையும் பிரித்துப் பார்க்க முடியாது. இவற்றுக்கிடையிலான தொடர்புகளை விளங்கிக் கொள்ளாது கட்டமைப்பு மாற்றத்தைப்பற்றி கலந்துரையாடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

கட்டமைப்பு மாற்றம்: ஆட்சி மாற்றமும் அரசு மாற்றமும்

தற்போதைய நெருக்கீட்டு நிலை இலஞ்சம், ஊழலில் ஈடுபட்ட ஆட்சியாளர்களையும், இனவாத அரச கட்டமைப்பை எதிர்ப்பதற்குமான அரசியல் வெளியை உருவாக்கியுள்ளது.nஆட்சி மாற்றம் இதற்காக ஒரு தீர்வாக மாட்டாது என்பதை வரலாறு பட்டறிவிற்கு ஊடாக கற்றுத்தந்திருந்தாலும், சில வேளை ஆட்சி மாற்றம் தற்காலிக தீர்வாக முன்மொழியப்படலாம். ராஜபக்சே குழுவினர் முழுமையாக அகற்றப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. தெற்கில் எதிரொழிக்கின்ற அரசியல் கட்டமைப்பு மாற்றம், குறிப்பாக நிறைவேற்று சனாதிபதி முறைமையை ஒழித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றல், நாடாளுமன்றுக்கு அதிக அதிகாரத்தை வழங்கல் போன்றவற்றோடு தமிழர்கள், தமிழ்பேசும் முஸ்லீம்கள் முன்வைக்கின்ற ஒற்றையாட்சி முறைமையை மாற்றுதல் கோரிக்கை தனியாக பிரித்துப்பார்க்கப்பட முடியாது. நாம் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறான நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளை எதிர்க்கின்றோம், உதாரணத்திற்கு முதலில் ராஜபக்சே குழுவினரை அனுப்பிவிட்டு பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப்பற்றி கலந்துரையாடுவது என்பது அபத்தமானது.

Final, Statement, North-East and South

தமிழர் மீது திணிக்கப்பட்ட போரும், தமிழர்மீது தொடர்ந்து இழைக்கப்படும் குற்றங்களும் அவர்களுடைய சுய நிணர்ய உரிமைக்கு எதிரானதும், தேசக் கோரிக்கைக்கு எதிரானதும் ஆகும். போரும் தொடர்ந்து வரும் குற்றங்களும் தமிழர்களை கூட்டாக பலவீனப்பபடுத்தும் ஒரு முயற்சியே. இவற்றின் ஒட்டுமொத்த வடிவத்தை அவதானிக்கின்ற போது இனப்படுகொலையின் உள்நோக்கம் தெளிவாகின்றது. மேற்குறிப்பிட்டதில் இருந்து பொறுப்புக்கூறல், நீதி, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன உதிரியானவைகளாக கணிக்கப்பட முடியாது. தமிழர்களின் சுய நிர்ணய கோரிக்கையை அங்கீகரிப்பதன் மூலம்தான் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முடியும்.

இவற்றின் அடிப்படையில் பொறுப்புக் கூறலையும் நீதியையும் காரணம் காட்டி இனப்பிரச்சினைக்கான தீர்வை தாமதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் நீதிக்கான தேடல், சட்டபூர்வமான நீதியால் ஈடுசெய்யப்பட முடியாது. பொறுப்புக்கூறல், தமிழர் தேசியப்பிரச்சினைத் தீர்ப்பதற்கான, நேர்மையான தேடல்தான் இத் தீவிற்கு நிலையான நல்லிணக்கத்தையும், நீதியையும் பெற்றுத்தர முடியும்.

தெற்கில் எழுகின்ற அரசியல் கட்டமைப்பு மாற்றம் பற்றிய கலந்துரையாடல்களில் இருந்து தமிழர் முன்வைக்கின்ற சனநாயக மாதிரி வடிவமாற்றம் பிரித்துப்பார்க்கப்பட முடியாதது. இத் தீவில் ஒற்றிமையை கட்டியெழுப்புவதற்கு இன தனித்துவத்தை அடையாளம் காண்பதின் ஊடாகத்தான் முடியும். தெற்கின் கோரிக்கைகளாக முன்வைக்கப்படும் அரசியல் கட்டமைப்பு மாற்றமும் தமிழர்கள் கோருகின்ற அடிப்படை அரசு முறை மாற்றமும் ஒரு சேர முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

Tamil News

Leave a Reply