ஐ.நா ஆணையாளரின் அறிக்கை இம்முறை அரசுக்கு கடுமையானதாக இருக்கும்-தர்மலிங்கம் சித்தார்த்தன்

ஐ.நா ஆணையாளரின் அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை இம்முறை அரசுக்கு எதிராக கடுமையாக இருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட்டமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஐ.நா ஆணையாளரின் அறிக்கை கடுமையானதாக இருக்கும் என நினைக்கின்றேன். இப்போது இலங்கை தமிழர்களுக்கு, அரசு செய்து வரும் செயல்களை அவர்கள் அறிவார்கள்.

ஆகவே அடுத்த மாதம் நடைபெறும் ஐநா சபை அமர்வில் அந்த அறிக்கை பாரப்படுத்தப்படும். அத்துடன் ஐ.நா ஆணையாளரின் அறிக்கைக்கான செயற்பாடுகள் தொடர்பில் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. சபையில் உறுதியான தீர்மானம் வெளிப்படும்.

சம்பந்தன் ஐயா ஏற்கனவே கடிதம் ஒன்றை சக நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஐநாவுக்கு கடிதங்களை அனுப்பவுள்ளனர். ஒன்றிணைந்து எழுதுவது நல்லது. ஆனால் அதற்கு காலம் எடுக்கும். ஆகவே தனியாகவே கடிதங்களை வேகமாக அனுப்பவுள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக, விடயங்களை திரட்டி, அதனை சர்வதேசத்துக்கு காண்பிக்கவே நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் நீதிச் சேவை முகாம்களை வடக்கில் மேற்கொண்டனர்.

அவர்களின் பயணம் நீதிக்கான பயணம் இல்லை. எங்கள் மத்தியில் பிழைகள் உள்ளது போன்று காட்டவே இவ்வாறு அவர்கள் செய்கின்றனர்.

அதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆகவே நாம் எமது எதிர்ப்புகளை பாராளுமன்றிலும் சரி, ஏனைய விடயங்களிலும் சரி தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவோம்” – என்றார்.

Tamil News