அண்ணா பிறந்த நாளில் எழுவரோடு, சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்-வ.கௌதமன் கோரிக்கை

WhatsApp Image 2021 09 13 at 12.58.38 PM அண்ணா பிறந்த நாளில் எழுவரோடு, சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்-வ.கௌதமன் கோரிக்கை

அறிஞர் அண்ணா பிறந்த நாளில் எழுவரோடு திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள் என்று தமிழக முதல்வருக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் “சோழன் குடில்” பொதுச்செயலாளர் வ.கௌதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில்,

செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 கைதிகளை விடுதலை செய்யவிருப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதைத்  தமிழ்ப் பேரரசு கட்சி வரவேற்கிறது. மேலும், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட  எழுவரோடு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

இரக்கமற்ற, கொடுங்கோன்மையான அரசியல் தலைவர்களையும்  போர்க்களங்களில் கொடூரமாக நடந்து கொண்ட தளபதிகளையும் கூட சிறைபிடித்து தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், பின்பு மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்ட எத்தனையோ வரலாறுகள் இவ்வுலகில் உண்டு. அப்பாவிகளையும், குற்றமற்றவர்களையும், குற்றத்தில் நேரடியாக பங்குபெறாதவர்களையும் கூட இருபது, முப்பது ஆண்டுகள் சிறையில் அடைத்து, அகிம்சை தேசம் இன்னும் கூட அவர்களை விடுதலை செய்யாமலிருப்பது என்பது மனித குலத்திற்கு அறமல்ல.

ஆகையினால் 31-ஆவது ஆண்டு சிறைவாசத்தில் வதைபட்டு கிடக்கும் 7 தமிழர்களையும், கடவுச்சீட்டு வழக்கில் கைதாகி 10 மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவிக்கக்கூடிய நிலையில், ஈராண்டு, மூன்றாண்டுகள் கடந்தும் கூட  திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களையும், பத்தாண்டுகள், இருபது ஆண்டுகள் தாண்டியும் சிறையிலிருக்கும் இஸ்லாமியர்களையும் தமிழ் மொழி, இனம், நிலம் எனப் போராடிய எத்தனையோ தமிழ் இளைஞர்களையும், தமிழ் தீவிரவாதிகள் என்ற முத்திரைகுத்தி, அவ்வாறு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருப்பவர்களையும், வீரப்பன் வழக்கில் கைதான அவரது அண்ணன் மாதையனும், ஆட்டோ சங்கரின் தம்பி மோகன் அவர்களும் முப்பத்தி ஆறு ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டு கிடக்கிறார்கள்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா என்பவர் எல்லோருக்கும் பொதுவானவராகவே வரலாற்றில் பார்க்கப்படுகிறார்.  பரந்த மனதோடு, இரக்க உள்ளத்தோடு, அனைவருக்குமான பொதுவான  பார்வையில், பத்தாண்டுகள் கடந்த அனைவரையும் பாகுபாடின்றி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

அரசியல் சட்டத்தை அவமதித்து, கரை படிந்த ஒரு வரலாற்றைச் சுமந்து செல்லும் பன்வாரிலால் புரோகித் அவர்களை போல் இல்லாமல், வரவிருக்கும் புதிய ஆளுநர் ரவி அவர்களாவது சட்டத்தை மதிக்கின்ற ஆளுநராக நடந்துகொள்ளவேண்டும். நேர்மையற்ற முறையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு ஜனாதிபதி அவர்களுக்கு எழுவர் விடுதலைக்கான கோப்பை அனுப்பியதை புதிய ஆளுநர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க 161ஆவது சட்டப் பிரிவினை பயன்படுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுவர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும். தாமதிக்கப்படும் நீதி அநீதிக்கு சமமானது என்பதைச் சாமானியர்கள் கூட உணர்ந்து உள்வாங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் ஆட்சியாளர்கள் தங்கள் கடமையை ஒருபோதும் தவறாகவோ, தாமதமாகவோ பயன்படுத்தக் கூடாது என,

தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக  மீண்டுமொருமுறை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.