நியூசிலாந்திடம் உதவிகோரும் அவுஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதி 

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் பல மாதங்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈரானிய அகதியை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடந்த நிலையில், தன்னை விடுவிக்குமாறு ஹமித் எனும் அந்த அகதியும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஹமித்தை விடுதலை செய்யக்கோரி தடுப்பு முகாம் எதிரே நடந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்றனர்.

முன்னதாக, அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு செயல்படும் நவுருத்தீவு முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஹமித் அவுஸ்திரேலியாவுக்கு இடமாற்றப்பட்டு ஹோட்டலல் தடுப்பில் வைக்கப்பட்டார். பின்னர் பிரிஸ்பேன் தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கேயே பல மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

“மனரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கி அவர்கள் (அவுஸ்திரேலிய அரசு) என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல நினைக்கிறார்கள்,” என ஹமித் கூறுகிறார்.

“அவுஸ்திரேலியா அரசியல்வாதிகளின் குரூரமான, மனிதத்தன்மையற்ற பிடியிலிருந்து நியூசிலாந்து அரசாங்கம் தங்கள் காக்க வேண்டும்,” என நியூசிலாந்து ஊடகத்திடம் ஈரானிய அகதியான ஹமித் தெரிவித்திருக்கிறார்.

“அவுஸ்திரேலிய அரசு என்னை விடுவிக்கவில்லை. பத்தாண்டுகளுக்கு பிறகும் தடுப்பு முகாமில் பல குற்றவாளிகளுக்கு மத்தியில் என்னை சிறைப்படுத்தியுள்ளனர். என்ன மாதிரி செயல் இது? சித்திரவதை தானே!” என ஈரானிய அகதி ஹமித் கூறியிருக்கிறார்.

“நவுருத்தீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்ட பிற அகதிகள் ஒரு வாரத்திற்குள் விடுதி தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர்,” என ஹமித்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு போராட்டக்காரர் கூறுகிறார்.

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் நியூசிலாந்தில் மீள்குடியேற ஹமித் விண்ணப்பித்திருக்கிறார். இந்த நிலையில், தன்னை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான பணியை வேகப்படுத்தும் படி அவர் நியூசிலாந்தை கோருகிறார்.