அந்நிய கையிருப்பு குறைவாக உள்ள ஒரு நாட்டை மீட்டெடுப்பது எளிதான விடயமல்ல-பிரதமர் ரணில்

ஆபத்தான முறையில் அந்நிய கையிருப்பு குறைவாக உள்ள ஒரு நாட்டை மீட்டெடுப்பது எளிதான விடயமல்ல. ஆரம்பத்தில் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை மெதுவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று நாம் இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (ஜூன் 22) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரம் முழுமையான சரிவைச் சந்தித்துள்ளதாகவும், அதுதான் இன்று இலங்கையர்கள் முன் உள்ள மிகத் தீவிரமான பிரச்னை எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலமே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

”இதைச் செய்ய, நாம் எதிர்கொள்ளும் அந்நிய கையிருப்பு நெருக்கடியை முதலில் தீர்க்க வேண்டும். முற்றிலும் சரிந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டை, குறிப்பாக ஆபத்தான முறையில் அந்நிய கையிருப்பு குறைவாக உள்ள ஒரு நாட்டை மீட்டெடுப்பது எளிதான விடயமல்ல. ஆரம்பத்தில் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை மெதுவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று நாம் இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்க முடியாது. ஆனால், இந்த வாய்ப்பை இழந்தோம். மிகக் கீழே விழுந்துவிடக் கூடும் என்பதற்கான அறிகுறிகளை இப்போது காண்கிறோம். இருப்பினும், இந்த சூழ்நிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். இல்லை என்றால் நாட்டில் வேறு எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பணத்துக்கு எரிபொருளை வழங்கக்கூட நாடுகளும், அமைப்புகளும் தயங்குவதாக பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

”தற்போது, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 700 மில்லியன் அமெரிக்க டாலர் கடனில் உள்ளது. இதன் விளைவாக, உலகில் எந்த நாடும் அல்லது அமைப்பும் எங்களுக்கு எரிபொருளை வழங்க தயாராக இல்லை. பணத்திற்கு எரிபொருளைக் கொடுக்கக்கூட தயங்குகிறார்கள்” என அவர் கூறினார்.

இந்தியாவிடமிருந்து தொடர்ந்து கடனை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

”இந்திய கடன் திட்டத்தின் கீழ், சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுக்கொண்டுள்ளோம். இந்தியாவிடமிருந்து நாம் மேலும் கடனுதவிகளை கோரியுள்ளோம். இந்தியாவால் இவ்வாறு தொடர்ச்சியாக எமக்கு கடனை வழங்க முடியாது. வரையறையொன்று உள்ளது. கடனை பெற்றுக்கொள்ளும் போது, அந்த கடனை மீள செலுத்துவதற்கான நடைமுறையொன்று எம்மிடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், எமக்கு யாரும் புண்ணியத்தின் அடிப்படையில் கடனை வழங்க மாட்டார்கள்.

குறிப்பாக, நாளைய தினம் இந்திய அரசாங்கத்தின் மூன்று உயர் அதிகாரிகள் நாட்டுக்கு வருகைத் தரவுள்ளனர். அடுத்தகட்ட கடனுதவிகளை வழங்குவது குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்காக இலங்கைக்கு வருகைத் தருகின்றார்கள். இது இலகுவான விடயம் கிடையாது. இயலுமான அளவு இந்தியா எமக்கு உதவி செய்துள்ளது. இந்திய வங்கிகளிலும் தற்போது பிரச்னைகள் காணப்படுகின்றன” என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இலங்கை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள்வது எப்படி? என்ற கேள்விக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில வழிமுறைகளையும் திட்டங்களையும் கூறி பதிலளித்தார்.

 1. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி, கூடுதல் கடன்களை பெற்று, அதனூடாக பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.
 2. 2019ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த வரி மீண்டும் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 2025ஆம் ஆண்டுக்குள் தேசிய வரவு செலவுத்திட்டத்தில் முதன்மை உபரியை உறுதி செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
 3. வருமானம் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடலுக்காக இலங்கைக்கு விஜயம் செய்தது. அதற்கான அறிக்கையை முன்வைத்தனர். திங்கட்கிழமை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான குழு இலங்கை வந்தடைந்ததுடன், குழுவுடனான பேச்சுவார்த்தை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்.
 4. பொது நிதி, நிதி, கடன் நிலைத்தன்மை, வங்கித் துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு போன்ற பல்வேறு துறைகள் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
 5. கடனை திருப்பிச் செலுத்தும் மறுசீரமைப்புக்கான கட்டமைப்பு வகுக்கப்படுகிறது.
 6. எதிர்வரும் திங்கட்கிழமை, அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவும் இலங்கை வரவுள்ளது.
 1. ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரபூர்வ ரீதியிலான உடன்படிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 2. கடன் வழங்கும் மாநாட்டை இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் முக்கிய கடன் வழங்கும் நாடுகளின் தலைமையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 3. ஒவ்வொரு நாட்டுக்கும் கடன் வழங்குவதற்கு வெவ்வேறு செயல்முறைகள் உள்ளன. கடன் உதவி மாநாட்டின் மூலம், கடன் வழங்கும் செயல்முறைகளில் பொதுவான ஒருமித்த கருத்துக்கு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 4. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒப்புதல் முத்திரையைப் பெற்றால், உலகம் மீண்டும் இலங்கையை நம்பும். உலகின் பிற நாடுகளில் இருந்து கடன் உதவி மற்றும் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற இது உதவும் .
 5. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, அமெரிக்கா, பிற நட்பு நாடுகள் மற்றும் நாட்டுத் தலைவர்களுடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும் வரை இடைக்கால குறுகிய காலக் கடன்களைப் பெறுவதற்கு விவாதங்கள் நடத்தப்படுகின்றன.
 6. இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை அமைக்க முடியும்.

இதேவேளை, இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கொண்டு வரப்படவுள்ள வரவு செலவுத்திட்டங்கள் தொடர்பிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்தார்.

”இலங்கையின் புதிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உருவாக்கவும் நாம் எமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். முன்னோக்கி செல்லும் பாதைக்கான அடித்தளத்தை உருவாக்க, ஆகஸ்ட் மாதம் 2022இல் மீதமுள்ள காலத்திற்கு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைப்போம். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும். இது தவிர, நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான பல புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்போம். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுடனும் இவை தொடர்பில் நாம் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளோம்” என பிரதமர் கூறினார்.

இதேவேளை, உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசியல் திருத்தங்களை மேற்கொள்ள பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான திட்டம் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

”விலைக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் அரிசியை இறக்குமதி செய்வதற்கும், இலங்கைச் சந்தைக்கு இருப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்போம். இதன் மூலம் இலங்கை நுகர்வோருக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும். நாட்டின் விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளுக்காக தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். அனைத்துக் கட்சிப் பிளவுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் விவாதங்களில் பல குழுக்கள் கலந்துகொள்கின்றன என்பதையும் நான் கவனிக்க விரும்புகிறேன்” என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.