கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாக மாறி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தமிழினப் படுகொலையாளர்கள் தற்போது மனிதாபிமானி வேடந்தரித்து தமது உலகமகா நடிப்புத்திறன்களை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடங்களைக் கடந்து பத்தாவது வருடம் ஆரம்பிக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைக்கேட்டு அவர்களின் போராட்டம் தொடர்கின்றது.
அவ்வாறு தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பலநூற்றுக்கணக்கான பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டும், வயது முதிர்வினாலும் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய அவலநிலைகளை தாங்கி கடந்த ஒன்பது ஆண்டுகளாக உறவுகள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். எனினும் கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வை வழங்கும் விவகாரத்தில் பாராமுகத்துடனேயே செயற்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்திடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான உரிய நீதியை வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழர் தாயகப்பரப்புக்களில் இடம்பெறும் நில அபகரிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட விடயங்களுடன், இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்குதல் விடயமும் மிகப் பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் இதுவரை இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை வழங்குவதற்கு இந்த ஆட்சியாளர்களும் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. மேலும் தற்போது உலகநாடுகளிடையே போர்மேகம் சூழ்ந்துள்ளது.
மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. 2009 இல் எம்மை அழிப்பதற்குத் துணைநின்றவர்கள் தங்களுக்கிடையில் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். எனினும் யுத்தத்தால் சிறார்கள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் என பலரும் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாதென்பதே தமிழர்களின் நிலைப்பாடு.
ஆனால் 2009 இல் திட்டமிட்டவகையில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளும் குண்டுபோட்டு தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்ட ராஜபக்சக்களின் கூடாரத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது மத்திய கிழக்கில் இடம்பெறும் போர்ச்சூழலுக்கு அனுதாபதந் தெரிவிக்கின்றனர்.
தற்போது மனிதாபிமானத்தைப்பற்றி பேசுகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்தநாடு முழுவதுமே தமிழர்களுடையது என, வரலாறுகள் கூறுகின்றன. இந்நிலையில் வடக்கும், கிழக்கும் பூர்வீக தமிழர் தாயகமென கோரிப் போராடியதும், தற்போதும் வடகிழக்குத்தான் தமிழர்தாயகம் எனக்கோருவதும் தமிழர்களின் பெருந்தன்மையாகும் என்றும் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.



