தேசியப் பற்றுமிக்க செயற்கரிய வீரன் இரஞ்சித்குமார்-இனியவன்

539 Views

செயற்கரிய வீரன் இரஞ்சித்குமார்

செயற்கரிய வீரன் இரஞ்சித்குமார்

தமிழீழ தாயக தேசத்தில் காவல்துறையின் உயர்நிலை வளர்ச்சிக்குரிய காலகட்டத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திரு.இ.இரஞ்சித்குமார் அவர்களின் இழப்புச் செய்தி அவரை அறிந்த அனைவரையும் ஆறாத்துயரில் ஆழ்த்தியது.

தாயக நிலப்பரப்பை விடுவித்து4, மக்களுக்கு நிர்வாக கட்டமைப்புக்களுக்கூடாக அனைத்துப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற தேசியத் தலைவரின் தீர்க்கமான செயற்பாட்டிற்கு அமைய தமிழீழ காவல்துறையின் தோற்றம் 1991நவம்பர்  19 அமையப் பெறுகின்றது.

“காக்கிச் சீருடை அணிந்த  சிறிலங்கா காவல்துறை நமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட  காட்டுமிராண்டித் தனமான படுகொலைகள்,   துன்புறுத்தல்கள் அதிக வெறுப்பை  ஏற்படுத்தியது.”

ஆனால் நமது நிர்வாகத்தில் காவல்துறை அணியும் சீருடையைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வரக்கூடாது என்று தேசியத் தலைவரின் தீர்க்கமான பார்வையில் உலக  ஒழுங்கில் அனைத்து நாடுகளின் பொதுத் தன்மைக்கு ஏற்ப மக்களின் மனதிற்கு இதமான அன்பை பகிர்ந்து கொள்ளக்கூடிய இளநீலமும் கருநீலமும் அடங்கிய சீருடையோடு குறைந்த வளத்துடன் மடடுப்படுத்தப்பட்ட ஆளணியோடு தமிழீழ காவல்துறை பரிணமித்தபோது இப்பணிக்காக முதல் பாசறையில் திரு. இரஞ்சித்குமார் அவர்களும் வளர்தெடுக்கப்படுகின்றார்.

இரஞ்சித்குமாரின் ஆளுமை வெளிப்பாடுகள்….

*1987/1988 ல் யாழ்.மத்திய கல்லூரியில் சிறந்த மணவ தலைமைத்துவமிக்கவராக துலங்கியவர்.

*உயர்தர கல்வியை முடித்துக்கொண்டவர் தேச விடுதலைக்காக பணியாற்ற காவல் துறையில் மனம் உவந்து இணைந்து கொண்டார்.

*கனிந்த முகம், அன்பான  பேச்சு. பண்பாக பழகும் பக்குவம், பணிவாக எல்லோரையும் ஏற்று நடக்கும் மனப்பாங்கு ஆளுமைமிக்க உடல்தோற்றம், சிறந்த தொடர்பாடல் ஓயாத செயற்திறன் இதுவே இவரது பணிக்குரிய தனித்துவம்.

*துறைசார்ந்த பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் என அன்புக்குரிய ஒருவராக கருதப்பட்டவர்.

*யாழ் மாவட்டத்தில் தொடங்கியது இவரது பணி. வன்னிப் பிரதேசங்கள் மற்றும் மன்னார் தொடக்கம் அனைத்து மாவட்டங்களிலும் செயலாற்றியவர்.

*1994 மன்னார் மாவட்டத்தில் முருங்கனில் காவல்பணிமனை ஆரம்பிக்கப்பட்டு 4 தொடக்கம் 6வரையான உறுப்பினர்களுடன் உப ஆய்வாளராக வருகைதந்து சிறந்த முறையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தி சமூக உறவை வளர்த்தெடுத்தவர்.

*மடு தேவாலய பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த ஒருலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வியலில் சமூகச் சீரழிவுகள் ஏற்படாதவாறு அன்றைய மடு பரிபாலகர்களின் வேண்டுகைக்கு அமையவும் காவல்துறை பணியினை கண்ணியமாக செயற்படுத்தியவர்.

*மடு தேவாலயத்தில் ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் திருவிழாவுக்கு தென் இலங்கையில் இருந்துவரும் அரசியல் பிரதிநிதிகள், சிங்கள மக்கள் வியந்து பாராட்டும் வகையில் தமிழீழ காவல்துறையின் செயற்திறனை பொறுப்பாளர்கள் ஏனைய உறுப்பினர்களின் உதவியோடு இரவு பகல் பாராமல் தன்கடமையை செய்து முடித்து, ஆயர், குருக்களின் நன்றிக்கு உரித்தானவராக செயற்பட்டவர்.

*கால ஓட்டத்தில் விடுதலையை விரைவுபடுத்தும் தமிழீழ தேசியத் தலைவரினதும்,  பொறுப்பாளர்களினதும் எதிர்பார்ப்புக்கு அமைய பல்வேறு தளங்களில் காவல்துறை  செயற்பாடுகளில் முன்னின்று செயலாற்றியவர்.

*இவரது அயராத செயற்பாடுகளால் ‘முதன்மைமிக்க ஆய்வாளராக’ பணிநிலை உயர்த்தப்பட்ட போதும் மக்கள் மனங்களுள் நற்பணியாளனாகவே நிலை நிறுத்தப்பட்டார்.

* 2000—2006ல் சமாதான காலத்தில் தமிழீழ அரச பிரதிநிதிகளை சந்திக்க  பேச்சுவார்த்தைக்காக வரும்  வெளிநாட்டு இராஜதந்திரிகள், பிரதிநிதிகளுக்கு இவரது முகம் தெரிந்திருக்கும். தாயக தேசத்தின் எல்லைக்குள் வரும்போது வழித்துணை பாதுகாப்பு என அனைத்திற்கும் பொறுப்புணர்வோடு செயற்பட்டவர்.

*போரின் இடம்பெயர்வுகள் மக்கள் துன்பங்கள் ஒவ்வொன்றிலும் உடனடி மனிதாபிமான தேவை எதுவோ அதனை தன்னகத்தே கொண்டு இறுதிவரை உயிர்காக்கும் உன்னத பணிக்காக உழைத்த உண்மைச் சாட்சி இவர்.

*இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா அரசபடையின் பிடிக்குள் சித்திரவதை, சிறைவாசம் அனுபவித்து உறுதி குலையாமல் பல உண்மைகளை உறங்க வைத்து மீண்டுவந்த மனிதம் இவர்.

*புலம்பெயர் தேசம் வந்தபோது அதே உணர்வு, அதே பக்குவம், அதே உறுதி. தாயகத்து மக்களின் இன்றைய நிலை என  கதைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்வார். ஆம் தாயக தேசத்தையும் மக்களையும் நினைந்துருகி மக்களின் நல்வாழ்வுக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பெற வேண்டுமென்ற உள்ளக்கிடக்கை அவரிடம் நிறைந்திருந்தது.

எதிர்பாராத உடல் உபாதையினால் சாவடைந்த துயரமான நிகழ்வு குடும்பத்திற்கும்   மக்களுக்கும் பேரிழப்பாக உள்ளது. உண்மையின் சாட்சியமாக உறுதியோடு செயற்பட்ட அற்புதான மாவீரனுக்கு இறுதிவணக்கம் உரித்தாகுக.

Tamil News

Leave a Reply