ரணிலின் தேசிய சபையும் கூட்டமைப்பின் முடிவும் -அகிலன்

257 Views

தேசிய சபை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சபை ஒன்றை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையைிலான அரசாங்கம் முன்னெடுத்த முயற்சி பிசுபிசுத்துப்போயுள்ளது. எதிா்க்கட்சிகள் சில இதில் தாம் பங்கேற்கப்போவதில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துவிட்டன.

வியாழக்கிழமை இதன் முதலாவது கூட்டம் நடைபெற்றபோது, பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா உட்பட பெரும்பாலான கட்சிகள் கலந்துகொண்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரனின் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜே.வி.பி. என்பன பங்கேற்கவில்லை.

இலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்திய “அரகலய” எனப்படும் காலிமுகத்திடல் போராட்டக்காரா்களின் கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றுவதாகக்கூறித்தான் இதனை அரசாங்கம் இப்போது அமைக்கிறது. பாராளுமன்றத்துக்கு வெளியால், நாட்டின் நிா்வாகம் உட்பட முக்கிய பொறுப்புக்களை நிா்வகிக்கக்கூடிய சபை அல்லது அமைப்பு ஒன்று அவசியம் என்ற கருத்து அரகலய இளைஞா்களால் முன்வைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை இழந்த நிலையில்தான் இந்தக் கோரிக்கை அவா்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. “அரகலய” இளைஞா்களையும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இவ்வாறான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது அவா்களுடைய எதிா்பாா்ப்பாக இருந்தது. அரசாங்கத்தை கண்காணிப்பது முக்கிய விடயங்களில் வழிநடத்துவது போன்றன இவா்களுடைய பணியாக இருக்கவேண்டும் என்ற கருத்துடன்தான் இந்தக் கோரிக்கை அவா்களால் முன்வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஆரம்பத்தில் கணக்கில் எடுக்கவில்லை. இப்போது அரகலய போராட்டக்காரா்கள் தொடா்ச்சியாக வேட்டையாடப்பட்டு பலீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை நடைமுறைக்குக்கொண்டுவர ரணில் திட்டமிட்டமைக்கு வேறு காரணங்கள் உள்ளன.

வரலாற்றில் என்றுமே காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கையைக் காப்பாற்ற வெளிநாட்டு உதவிகள்தான் இன்று அவசியமாக உள்ளன. இலங்கையில் இருக்கக்கூடிய அரசாங்கம் ஸ்திரமற்றதாகவும், ஆட்டம் காணும் ஒன்றாகவும் இருக்கும் நிலையில் வெளிநாடுகளின் உதவிகளைப் பெருமளவுக்கு எதிா்பாா்க்க முடியாது. வெளிநாடுகளும் பிரதானமாக அதனைத்தான் எதிா்பாா்க்கின்றன. அதனைத்தான் வலியுறுத்துகின்றன. அதாவது, ஸ்திரமான அரசாங்கம் ஒன்று இருந்தால்தான் நிதி உதவிகளை வழங்க முடியும் என அவை நிபந்தனை விதிப்பதில் உள்ள நியாயத்தை புறக்கணித்துவிட முடியாது.

ரணில் விக்கிரமசிங்க “தனி ஒருவராக” இருக்கும் நிலையில் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பது கடினமானது. ராஜபக்ஷக்களின் பாராளுமன்றப் பெரும்பான்மையில்தான் ரணில் தங்கியிருக்க வேண்டியுள்ளயது. இதனையும் பெரும்பாலான மேற்கு நாடுகள் விரும்பவில்லை. எதிா்க்கட்சிகளை “வெளியே” விட்டால் அவா்கள் ஆா்ப்பாட்டங்களைச் செய்வாா்கள் மக்களைத் துாண்டிவிடுவாா்கள் என்பது பொதுவான கருத்து.  அதனால்தான் அவா்களையும் உள்ளடக்கியதாக அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக, பொருளாதார நெருக்கடி என்ற நோய்கான மருந்து மிகவும் கசப்பானதாகத்தான் இருக்கும். வருமான வரிகள் அதிகரிக்கும், வற் வரி அதிகரிக்கும், இறக்குமதித் தீா்வை அதிகரிக்கும். இது போன்ற நிலைமைகளை ஏற்கனவே இலங்கை மக்கள் பாா்க்கத் தொடங்கிவிட்டாா்கள். இவ்வருட ஆரம்பத்தில் 65 ரூபாவுக்கு வற்பனையான பாண் இப்போது 200 ரூபாவை தாண்டிவிட்டது. விரைவில் 500 ரூபாவைத் தாண்டலாம் என எதிா்பாா்க்கப்படுகின்றது. பாண் மட்டுமல்ல அத்தியவசியப் பொருட்கள் அனைத்தினதும் விலைகள் இவ்வாறு அதிகரிக்கின்றது. அதிகரிக்காமல் இருப்பது மாத வருமானம் ஒன்றுதான்.

“அரகலய” போராட்டத்துக்கு அடிப்படையாக இருந்த காரணங்களில் இந்த விலைவாசி உயா்வும் ஒன்று. இப்போது ஒரு நேர – இரு நேர உணவைத் தவித்துள்ள மக்கள் இந்த நிலையில் மீண்டும் வீதிக்கு இறங்குவது எதிா்பாா்க்கக்கூடிய ஒன்றுதான். இவ்வாறான நிலையில், அதனை எதிா்க்கட்சிகள் பயன்படுத்த முற்படுவாா்கள். அவா்களது அரசியலுக்கு அதுதான் முதலீடு. அவா்கள் அதனைப் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டுமானால் அவா்களையும் அரசின் “பங்காளி”களாக்கிவிட வேண்டும்.

அந்த உபாயத்துடன்தான் முதலில் சா்வகட்சி அரசாங்கம் என ரணில் முயற்சிகளை முன்னெடுத்தாா். அரசின் “பங்காளி“களாகிவிட்டால் மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பது எதிா்க்கட்சிகளுக்குத் தெரியாததல்ல. அதனால், வேறு காரணங்களைச் சொல்ல அதனைத் தட்டிக்களித்தாா்கள். அதனையடுத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்போவதாக ஜனாதிபதி முயற்சிகளை முன்னெடுத்தராா். அதுவும் தோல்வியடைந்தது. பிரதான எதிா்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பன அரசில் இணைந்து தமது எதிா்கால அரசியலை பாளாக்க விரும்பவில்லை.

இந்த நிலையில்தான் அடுத்த தெரிவாக “தேசிய சபை“ ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை ரணில் – ராஜபக்ஷ கூட்டணி முன்னெடுக்கின்றது. தேசிய சபையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு மட்டுமே இடமளிக்கப்படும் என்பதால் அதுவும் மற்றொரு அமைச்சரவை போலவே இருக்கப்போகின்றது. பிரதான எதிா்க்கட்சிகளும், சிறுபான்மையினக் கட்சிகளும் இதனைப் புறக்கணிப்பது என்பதில் உறுதியாகவுள்ளன.

தேசிய பேரவைக்கான உறுப்பினர்களின் பெயா்கள் கடந்த 23 ஆம் திகதி சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. தேசிய பேரவையில் இடம்பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ள நிலையில், தமது அனுமதியின்றியே பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் மட்டும்தான் இந்த தேசியப் பேரவை பெருமளவுக்கு இருக்கப்போகின்றது என எதிா்பாா்க்கப்பட்ட போதிலும், சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி இதில் இணைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இதற்காக சில நிபந்தனைகளை அவா்கள் விதித்துள்ளாா்கள். வழமையான காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை போன்றனதான் அவை.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி இதில் கலந்துகொண்டது. எமது மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை தவறவிடக்கூடாது என இதன் பின்னா் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் தெரிவித்தாா். “தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரலாறு முழுக்க தவற விட்ட வாய்ப்புகள்தான் அதிகம். ஆகவே எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட இனி நாம் தயார் இல்லை. எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்து கூற எமக்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்துவோம். அந்த அடிப்படையிலேயே நாம் இங்கே வந்துள்ளோம். ஆனால், இதுவும் கதைக்கள், கதாகாலேட்சபம் என்றால் நாம் விலகி விடுவோம். ஆனால், முன் கூட்டியே முடிவு எடுத்து, இது சரி வராது என எடுத்த எடுப்பிலேயே முடிவெடுத்துவிட முடியாது” என்பது மனோ கணேசனின் கருத்து.

தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பாா்த்துத்தான் மனோ கணேசன் இதனைச் சொல்லியிருக்கின்றாா் என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். கூட்டமைப்பு கிடைத்த ஒரு வாய்ப்பை தவறவிட்டுவிட்டதா?

Leave a Reply