இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க- பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி

இலங்கை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வு இன்று காலை நடந்தது. வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கையும் முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறி பதவி விலகியதையடுத்து  , பதில் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து  புதிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று  பாராளுமன்றத்தில்   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  நடைபெற்ற நிலையில், ரணில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய வேட்பாளர்களான டளஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

புதிய ஜனாதிபதி பதவிற்கு,  பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.