அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண வேண்டும்- ரணில் கருத்து

இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, பாராளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் “நாடு இன்றுள்ள நிலைமை தொடர்பாக நாம் அனைவரும் நன்றாக அறிவோம். எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் பிரிந்து செயற்பட்ட காலம் இத்தோடு முடிவுற்றுவிட்டது. நாம் இனிமேல் ஒன்றாக பயணிக்க வேண்டும். நாளை முதல் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உழைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும  புதிய ஜனாதிபதி ரணிலிடம்  கேட்டுக்கொண்டுள்ளார்.