ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கிய ரணில்  

110 Views

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சரும், இலங்கையின் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பு ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கையெழுத்திட்டிருந்தார்.இந்த நிலையில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியில், 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்ஜன் ராமநாயக்க கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணைகளை நடத்திய உயர்நீதிமன்றம், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி  ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து,  தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு விடுதலை வழங்காத பின்னணியில், கொலை குற்ற வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய   பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த செயற்பாட்டிற்கு பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, ரஞஜன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கிய நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply