தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் யாழில் கொண்டாடப்பட்டது : ஜே.வி.பிக்கு இல்லாத தடை விடுதலைப் புலிகளுக்கு மட்டும் ஏன் என பாராளுமன்றில் கேள்வி

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்றைய தினம் (26) யாழில் கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக வீடு இருந்த காணிக்குள் கொண்டாட்ட கேக் வெட்டி பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தேசியத் தலைவரின் பிறந்தநாளை மறைந்த அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்னெடுத்து வந்திருந்தார்.

இந்தநிலையில் இம்முறை எம்.கே.சிவாஜிலிங்கத்தின் செயற்பாடுகளும் நினைவு கூரப்பட்டன

அதேவேளை , தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்துள்ள குறித்த காணியின் மதிலில் “அவர் வாழ்ந்த இல்லம்” என்ற பதாகையும் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னர் கட்டப்பட்டிருந்த பதாகை கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்ட நிலையில் புதிய பதாகை கட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், ஜே.வி.பி.யும் ஆயுதமேந்திப் போராடியவர்கள் என்றாலும், இனவாதத்தின் அடிப்படையில் அவர்களை இந்த அரசாங்கம் உள்ளிட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள் வேறுபடுத்தி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (26) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“இன்று இலங்கையின் சட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ளது.

அதேபோல, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதோ, அவரின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதோ தடையாகக் கருதப்படுகிறது.

எந்தவிதக் கொண்டாட்டங்களையும் அவர் சார்பில் முன்னெடுக்கக் கூடாது எனச் சட்டம் சொல்கிறது.

அப்படியிருக்கையில், ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜேவீரவும், ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய பலரும் இன்று தடைசெய்யப்பட்டவர்கள் அல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

“ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டவர்கள் என்றாலும், இன்று அவர்கள் தடை செய்யப்பட்டவர்கள் அல்ல.

அப்படியென்றால், விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்வதற்கும், ஜே.வி.பி. அமைப்பைத் தடை செய்யாமல் இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு என்ன?”என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இரு தரப்பும் ஆயுதமேந்தியவர்கள். ஆயுதமேந்திய விடயம்தான் பயங்கரவாதம் என்றால் இரு தரப்பும் தடை செய்யப்பட வேண்டும்.

இல்லையென்றால், ஆயுதப் போராட்டம் இல்லாத இந்தச் சந்தர்ப்பத்தில் இரு தரப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினவினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு, கிழக்கை மையப்படுத்திப் போராட்டத்தை முன்னெடுத்தது.

ஆனால், ஜே.வி.பி. முழு நாட்டையும் பிடிக்கப் போராடியது. இதில் என்ன நியாயம் இருக்கிறது? இதன் பெயரே இனவாதம். இவ்வாறான விடயங்களே நாட்டைப் பிரித்து வைத்துள்ளன” என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.