செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவுக்குத் தண்டனை விதிப்பது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, டயனா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, பிரதிவாதியான டயனா கமகேவை முன் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான், பிரதிவாதியின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
டயனா கமகே 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்துள்ளார்.
இது தொடர்பில், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் டயனா கமகேவுக்கு எதிராக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (26) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரதிவாதியான டயனா கமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது, பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், தமது சேவை பெறுநர் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.



