வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய வழிகாட்டல்கள், பரிந்துரைகள் வெளியீடு – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

பொறுப்புவாய்ந்த வணிக நடத்தையை ஊக்குவிப்பதையும், பெருநிறுவனக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் மனித உரிமைக் கோட்பாடுகளை  உள்வாங்குவதையும் நோக்காகக்கொண்டு முதற்தடவையாக வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய  வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்  வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த முயற்சியானது ஆணைக்குழுவின் வணிகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான துணைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டது  என்றும், இதற்கான ஆரம்பக் கோவை அதன் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புப் பிரிவினால் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான வழிகாட்டல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள  இந்த வழிகாட்டல்கள், வணிகங்கள் மனித உரிமைகளுக்கு  மதிப்பதற்கும், வணிக நடவடிக்கைகளால் ஏற்படும் மோசமான தாக்கங்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்குமான ஒரு நடைமுறைச் சட்டகத்தை வழங்குகின்றன.

இதற்கான தொழில்நுட்ப உதவியானது சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மெக்ஸ் பிளாங்க் அறக்கட்டளை மற்றும் வளமான எதிர்காலத்துக்கான நிலையம் ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடனான நடைமுறைப்படுத்தப்படும் “இலங்கை மற்றும் மாலைதீவில் வணிகம் மற்றும் மனித உரிமைகளை அங்கீகரிப்பதை ஊக்குவித்தல்” என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறை உள்ளிட்ட பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்படுவதற்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வணிகம் மற்றும் மனித உரிமைகள் துணைக்குழு மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் துணைக்குழு ஆகியவற்றினால் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய, இந்த வழிகாட்டல்கள் முதலீட்டையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ தடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை  அல்ல. மாறாக வலுவான சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை தரநிலைகளுக்கு மநிப்பளிக்கும்  முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய, பொறுப்புமிக்க மற்றும் நிலையான வணிகச் சூழலைக் கட்டியெழுப்புவதற்காகவே  உருவாக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.