அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்க கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் 

அவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிச்சயத்தன்மையற்ற சூழலின் கீழ் சிக்கியுள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை வழங்க கோரி அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா, 10 ஆண்டுகள் போதாதா? புகலிடம் கோருவது குற்றமல்ல என கைகளில் பதாகைகள் ஏந்தி சிட்னி, கான்பரா, மெல்பேர்ன் உள்ளிட்ட நகரங்களில் நடந்த போராட்டங்களில் பலர் பங்கேற்றிருக்கின்றனர்.

அத்துடன், அகதிகளை அரசியல் கைதிகளை போல் நடத்துவதாக ஆஸ்திரேலிய அரசின் மீது போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“நான் பத்தாண்டுகளாக இணைப்பு விசாவில் காத்திருக்கிறேன். 19 ஆயிரம் அகதிகளுக்கு அரசு விசா வழங்கியது நல்ல விஷயம் தான், ஆனால் விசா வழங்கப்படாத 12 ஆயிரம் அகதிகளில் நானும் ஒருவன்,” என வங்கதேச அகதி பஹர் உடின் தெரிவித்திருக்கிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டில் படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்களது தாய்நிலம் எங்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதால் அங்கிருந்து வெளியேறினோம். நாங்கள் இப்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். இங்கு கடுமையாக உழைக்கிறோம், வரி செலுத்துகிறோம். எனது விசா நிலையின் காரணமாக எதிர்காலமற்று கிடக்கிறேன்,” எனக் கூறியிருக்கிறார் ஈராக்கிலிருந்து வெளியேறிய அல்-கிலாபி.

அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளுக்கு மட்டுமின்றி அவுஸ்திரேலியாவை படகு மூலம் அடைய முயன்று இந்தோனேசியாவில் சிக்கியுள்ள 7 ஆயிரம் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனக்  கூறுகிறார் அகதிகள் நல செயல்பாட்டாளரான ஐன் ரிண்டோல்.

“இணைப்பு விசாக்களில் சிக்கியுள்ள பெரும்பாலான புகலிடக்கோரிக்கையாளர்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியாவின் வெளியுறவுக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள்,” என ஐன் ரிண்டோல் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply