பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி வவுனியாவில் போராட்டம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புத்தேடி பணிப்பெண்களாக சென்று பல்வேறு காரணங்களால் இலங்கை திரும்ப முடியாது நிர்க்கதியாகியுள்ள பெண் தொழிலாளர்களை உடனடியாக இலங்கைக்கு திரும்பி கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் வவுனியா வேப்பங்குளம் பகுதியில்   குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை அரசே வெளிநாடு வேலைக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய், அரச இலாபத்திற்காக பெண்களை விற்காதே, பெண்களை விலைக்கு  வாங்காதே போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இறுதியில் அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான மகஜரை ஊடகங்களுக்கு வாசித்து காட்டியிருந்தனர். அதன் பிரதிகளை மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், அலி சப்ரி – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பொது முகாமையாளர் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் ஆகியவற்றிற்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.