மீனவர்களின் விடுதலை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி குறித்த கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் குடும்பத்தினரோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 55 பேர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து 3 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. அவர்களை விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.