நாடுகளைத் தழுவாது, மக்களைத் தழுவியே மக்கள் இறைமையைப் பாதுகாக்கலாம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 413

இன்று உலக அரசியல் ஒழுங்குமுறை அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களாலும் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அவர்களாலும் முற்றாகச் சீர்குலைக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழர் போன்ற சிறுதேச இனங்கள் நாடுகளைத் தழுவாது மக்களைத் தழுவியே மக்கள் இறைமையைப் பாதுகாக்க வேண்டிய நிலை இயல்பாகியுள்ளது என்பதனை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது. ஐக்கிய நாடுகள் சபையும் அதன் கட்டமைப்புக்களான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்கள் அனைத்துலக நீதிக்கான நீதிமன்றங்கள் மனித உரிமைகள் ஆணையகம் எல்லாமே சுதந்திரமாக தீர்மானம் எடுக்கும் நிலையை இழந்து வருகின்றன என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் ஈழத்தமிழர் புலம்பதிந்து வாழ்பவர்கள் முன்னைய முறையிலேயே நாடுகளைத் தழுவியே அனைத்துலக நீதியை தீர்வுகளை பெற முயற்சிக்கின்றனர் இவைகள் எந்த அளவுக்கு ஏற்புடைய பலனைத் தரும் என்பதை மீளாய்வு செய்ய வேண்டும் என்பது இலக்கின் இவ்வார கருத்தாக உள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் இந்தியாவின் தன்னைத் தனது தனித்துவத்துடன் பாதுகாப்பதற்கான (Protectionism) திட்டங்களுக்கு தேவையான ஒன்றாக அமைந்தது. இதனால் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டம் ஆயுதம் தாங்கிய போராளிகள் போராட்டமாகப் பரிணாமமடைந்தது வரலாறு. ஆனால் இன்று உலக அரசியல் ஒழுங்குமுறை இல்லாமல் போயுள்ள நிலையில் இந்தியாவுக்குச் சர்வதேச முறைமைக்குள் தன் நிலையைப் பேணல் என்கின்ற வகையில் இந்திய வெளிவிவகாரக் கொள்கைகள் கட்டமைக்கப்படுகின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் முனைவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்கள் Bloomberg  ஊடக செய்தித்துறை பிரதம ஆசிரியர் மைக்கலத்வெயிட் (Mickletwait)  அளித்த பேட்டியில் மைக்கலத்வெயிட் 2020 இல் முனைவர் ஜெய்சங்கர் அவர்கள்  எழுதிய “இந்திய வழி – உறுதியற்ற உலகுக்கான தந்திரோபாயங்கள்” (Indian Way – Strategies for uncertain world)  என்னும் நூலில் எழுதியவாறு “ அமெரிக்காவுடன் Engage – ஈடுபாடு, சீனாவுடன் Manage  – மேலாண்மை, ஐரோப்பாவுடன் cultivate பேணி வளர்த்தல் ரஷ்யாவுடன் reassure மீளுறுதி செய்தல் யப்பானுடன் – formulation உருவாக்கல் என்பது இந்திய வெளிவிவகாரக் கொள்கை எனச் சுருக்கமாகக் குறித்திருந்ததை வெளிப்படுத்தி செவ்வியைத் தொடங்கினார்.
இதுதான் ராஜதந்திரம். இடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப ஏற்படும் பரிணாமத்தை புரிந்து அதற்கேற்ப நடந்தால்தான் அனைத்துலக தொடர்பாடலில் ஏற்புடைய பலனைப் பெற முடியும் என்பதை ஈழத்தமிழர்களாகிய நாம் புரிந்து நமக்கான அரசியல் கொள்கையில் உறுதியின் உறைவிடமாக உள்ளத்தில் நின்று கொண்டு  பொருளாதாரக் கொள்கையை அனைத்துலகத்தவருடன் இணைந்து வாழத்தக்க வகையில் வரையறுக்க வேண்டும் என்பது இலக்கின் வேண்டுகோளாகவுள்ளது. ஏனெனில் இன்று பொருளாதாரத் தந்திரோபாயம்தான் ஒரு இனத்தை உலக இனம் மதித்து ஏற்பதற்கான திறவுகோலாக உள்ளது. இதற்கு ஈழத்தமிழரின் மனிதவலு மூலதனவலு மண்ணின் இயற்கைவலு துறைசார் நிபுணர்களால் பட்டியலிடப்படல் காலத்தின் தேவையாக உள்ளது. பின்னர் நாடுகளுடன் நாடுகள் இணைந்து செயற்படல் போல மக்களுடன் மக்கள் இணைந்து செயற்பட பொறுப்புள்ளவர்களாக உலக ஈழத்தமிழினம் உள்ளது.
மேலும் இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி ஒரு மண்ணின் இயற்கை வளத்தை மக்களின் மனிதவலுவை உழைப்பின் மூலதனத்தைச் சுரண்டல் என்ற வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகளின் வழக்காகவுள்ளது. கடந்தவாரத்தில் அமெரிக்க அரசத்தலைவர் ஈரானுக்கு இந்த இனங்காணக்கூடிய அச்சத்தை ஊடகங்கள் வழி ஏற்படுத்தக் கூடிய முறையில் ஆங்கிலத்தில் ‘ Mother of All Bombs’  ‘குண்டுகளுக்கெல்லாம் தாய்க்குண்டு’ என்பதன் சுருக்கப் பெயராக MOAB என அழைக்கப்படும்  அணுவாயுதமில்லாத ஆனால் மிக அதிக நிறையான 21600 இறாத்தல் நிறைக் குண்டான GBU-43/B வகைக் குண்டுகள் ட்ரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2017 இல் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் வீசப்பட்டது போல ஈரானின் அணுவாயுத தயாரிப்புக்கான மூலப்பாகங்கள் வைத்திருக்கும் பிக்அக்ஸ் (PICKAXE) மலைப்பகுதிகளில் நவம்பர் மாதம் 3ஆம் நாள் அமெரிக்க 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதி தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவோ பின்னதாகவோ வீசப்படலாம் என ட்ரம்ப் எச்சரித்து வருகிறார் என்ற செய்தியினை அமெரிக்க சி.என்.என்  தொலைக்காட்சி நிறுவனம் கடந்த வாரத்தில்  தெரியப்படுத்தியுள்ளது.
ஈரானின் பாராளுமன்றச் சபாநாயகர் ஈரானால் அமெரிக்காவின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியுமென தெரிவித்துள்ளமை ஈரான் மேலான அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்போர் வெல்லப்பட முடியாதவொன்றாகவே தொடரும் என்பதனை உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் உலகில் பணவீக்கமும் பொருட்கள் விலையேற்றமும் சாதாரண மக்களால் தாங்க இயலாத அளவுக்கு அதிகரிக்கிறது. அமெரிக்காவிலேயே 3.9 ஆகப் பணவீக்க அளவாக அதிகரித்துள்ளது. கூடவே எல் நினோ பசுபிக்கடல் வெப்ப நிலை ஈழத்தில் வெள்ளங்களையும் வறட்சிகளையும் மாறி மாறி ஏற்படுத்தலாம் என்பதால் விளைச்சல்கள் வீழ்ச்சியடைந்து பட்டினி நிலை ஏற்படலாம். இவற்றை எதிர்நோக்க மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் ஈழம் உட்பட உணவு வங்கிகளை (Food Banks)  உடன் ஏற்படுத்த வேண்டும் என்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது. மூத்த வயதினர் இளைய வயதினர் என்னும் இருநிலையிலும் மக்களின் நாளாந்த வாழ்வு பாதிக்கப்படாதவாறு பல்கலைக்கழகங்கள் துறைசார் நிபுணர்களை இணைத்து செயலமர்வுகளை ஏற்படுத்தி மக்கள் நலம் பேணும் மையங்களை எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் ஈழத்தமிழர் தாயகப்பகுதிகளில் ஏற்படுத்த வேண்டிய உடன் தேவையுள்ளது என்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
மேலும் பறக்கும் காரை கடந்த வாரத்தில் அறிமுகம் செய்த பில்லியன் டொலர் செல்வந்தர் எலன் மஸ்க் குடியரசுக்கட்சிக்கு யூலை மாதம் வரை இந்த 2026ஆம் ஆண்டின் நடுவாண்டுத் தேர்தலுக்காக 276 மில்லியன் டொலர்களை வழங்கி முதலாவது இடத்தை நன்கொடை வழங்குவதில் பெற்றுள்ள நிலையில், உக்ரேன் ரஷ்ய போரில் உக்ரேன் ஏவும் தன்னியங்கு ட்ரோன்களின் வேகத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தலே அவை ரஸ்யாவை எதிர்பார்த்தவாறு தாக்கிச் சேதத்தை ஏற்படுத்த இயலாது உள்ளது என கடந்த வாரத்தில் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அதே வேளை ரஸ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு ட்ரம்ப் அமெரிக்க காங்கிரஸ் செனட் அனுமதியின்றி தன்னிச்சையாக ஒப்பந்தம் செய்ததும் ரஸ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்தப் போவதாகக் கூறியதும் உக்ரேன் அரசத்தலைவர் செலென்ஸ்கி ரஸ்யா போரைத் தொடர்வதற்குப் பணம் கிடைக்கச் செய்யும் துரோகத்தனம் எனக் கூறியுள்ளார்.
அதே வேளை பிரித்தானிய பிரதமரையும் பிரான்சிய அரசத்தலைவரையும் சந்தித்த பொழுது இருவருமே உக்ரேனை தாங்கள் கைவிட மாட்டார்கள் என உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியமும் இத்தகைய உறுதியை வழங்கிய நிலையில் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் செலென்ஸ்கி ஹங்கேரிக்கு நேரடியாகச் சென்றுள்ளமை புடாபெஸ்டின் உக்ரேன் ஆதரவு மீண்டுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு செலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதிலும் நேரடியாகச் சென்று உதவிகோருவதை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் முன்னுதாரணமாகக் கருதி, சமூக வலைத் தளங்களில் சட்பொட் இன்டிமேசி (Chatbot Intimacy)  எனப்படும் ஆள்நிலைப்பட்ட உறவாடலின்றி  சமூக வலைத்தளங்களையே தங்கள் நெருக்கமான உறவாக மாற்றாது  முற்பதிவுக்குறிகளை (pre-dictated text)  பயன்படுத்தித் துலங்கல்களை வெளிப்படுத்தாது மக்களிடம் சென்று மக்களுடன் பேசி உறவாடி தேவைகளை அறிந்து அவற்றைத் தீர்க்க வல்லனவற்றை செய்து அவர்களுடன் நட்பை வளர்த்து அந்தப் பின்னணியில் தேசஉருவாக்கத்தை ஜென்சி அல்பா இளையவர்களையும் உள்ளடக்கி செய்வதற்கான துறைசார் கட்டமைப்புகளையும்  அவற்றுக்கான மதிநிதி வளங்களையும் அனைத்துலக ஈழத்தமிழர்கள் வளர்த்தாலே இன்றைய பொருளாதாரத் தந்திரோபாயங்களுக்கு ஏற்ப ஈழத்தமிழர்களை அனைத்துலக சமூகம் ஏற்று அவர்களின் இறைமையைப் பாதுகாக்க முன்வரும் என்பதே இலக்கின் உறுதியான கருத்து.
ஆசிரியர்

Tamil News