கடந்த புதன்கிழமை காலை இடம்பெற்ற கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்தின் கைதும், கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு அன்று மாலை அவா் விடுதலை செய்யப்பட்டமையும் இரண்டு விடயங்களை உணா்த்தியிருக்கின்றது. சட்டத்தின் மூலமாக பாதுகாப்பும் நலன்களும் எப்போதும் சிங்களவா்களுக்கு மட்டும்தான் என்பது முதலாவது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் இனவாத கட்சிகளின் குரலுக்குத்தான் செவிசாய்க்கும் என்பது இரண்டாவது.
கஜேந்திரகுமாா் கைது செய்யப்பட்டதும், ஒரு நாள் முழுக்க அவா் அலைக்களிக்கப்பட்டதும் தெளிவான ஒரு உள்நோக்கத்துடன்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் என்ற முறையில் கஜேந்திரகுமாருக்கு சில சிறப்புரிமைகள் உள்ளன. அதில், முக்கியமானது, நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ள நிலையில் எம்.பி. ஒருவரை கைது செய்யக்கூடாது என்பது. அவ்வாறு கைது செய்ய வேண்டிய நிா்ப்பந்தம் இருந்தால், அவா் தனது நாடாளுமன்ற உரையை முடித்த பின்னா் கைது செய்ய வேண்டும் என்பதுதான் நடைமுறை.
செவ்வாய்கிழமை (06-06-2023) நாடாளுமன்றம் கூடிய போது இரண்டு விடயங்களை சபாநாயகரிடம் தெரியப்படுத்தியிருந்தாா் கஜேந்திரகுமாா். முதலாவது, முதலாவது, மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடா்பானது. இரண்டாவது, இது தொடா்பாக மறுநான் புதன் கிழமை (07-06 -2023) சிறப்ரிமைப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பப்போதாகவும் தெரியப்படுத்தினாா். அதாவது, புதன்கிழமை கஜேந்திரகுமாா் நாடாளுமன்றத்தில் உரையாற்றப்போகின்றாா் என்பது பகிரங்கமாகத் தெரியப்படுத்தப்பட்டது.
நாடாளுமன்றத்துக்குள் இது நடைபெற்ற அதேவேளையில், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் இதனுடன் தொடா்புபட்ட இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றன.முதலாவது சம்பவம் கஜேந்திரகுமாருக்கு வெளிநாடு செல்வதற்கான தடை கிளிநொச்சி நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது. அத்துடன் வியாழக்கிழமை (08-06-2023) அவா் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பான கடிதம் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்தில் வைத்து அவரிடம் கொடுக்கப்பட்டது.
இரண்டாவது சம்பவம், செவ்வாய்கிழமையன்றே “சிங்கள ராவய” என்ற இனவாத அமைப்பு நாடாளுமன்றத்தின் முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. கஜேந்திரகுமாா் சிறப்புரிமையைக் கிளப்பி உரையாற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அவா்கள் முன்வைத்த ஒரே கோரிக்கை. சபாநாயகரிடம் இந்தக் கோரிக்கையை அவா்கள் முன்வைத்தாா்கள். இல்லையென்றால், நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் என்றும் அவா்கள் எச்சரித்தாா்கள்.
இந்தப் பின்னணியில்தான் கஜேந்திரகுமாா் புதன்கிழமை காலை வீட்டில் வைத்து கைது செய்யப்படுகின்றாா். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக முன்னறிவித்தல் கொடுத்திருந்த நிலையில் தன்னைக் கைது செய்ய முடியாது என்பதையும், வியாழக்கிழமை மருதங்கேணி பொலிஸில் ஆஜராவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதற்காக அவசரமாக கைது செய்ய வேண்டும் என்ற கஜேந்திரகுமாரின் கேள்விக்கு பொலிஸாரிடம் பதில் இருக்கவில்லை.
அதனைவிட அவரைக் கைது செய்வதற்காக வாரன்ட் கூட பொலிஸாரிடம் இருக்கவில்லை. இது தொடா்பாக சபாநாயகரிடமும் அவா் உடனடியாகவே முறைப்பாடு செய்திருக்கின்றாா். சபாநாயகா் கேட்ட போதும் கைது வாரன்ட் தம்மிடம் இல்லை என்பதை பொலிஸாா் ஒப்புக்கொண்டாா்கள். நாடாளுமன்றத்தில் தனது உரையை முடித்தபின்னா் வருவதாக கஜேந்திரகுமாா் சொன்னதையும் பொலிஸாா் கேட்கவில்லை. சபாநாயகரும் இந்த விவகாரத்தில் உறுதியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
சபாநாயகரின் பாத்திரமும் இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்குரிதாகவே உள்ளது. எம்.பி.க்களின் சிறப்புரிமையைப் பாதுகாப்பதுதான் சபாநாயகரின் பிரதான பணி. அதானால்தான் எம்.பி. ஒருவரை கைது செய்யும் போது, சபாநாயகரிடமிருந்து அதற்கான முன்னனுமதி பெறப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும், எம்.பி. ஒருவா் நாடாளுமன்றத்தில் முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்துவதற்கு முன்னறிவித்தல் கொடுத்திருக்கும் நிலையில், அவரை கைது செய்து கிளிநொச்சிக்கு கொண்டு செல்வதற்கு சபாநாயகா் எவ்வாறு அனுமதி வழங்கினாா்?
நாடாளுமன்றத்தில் அவா் உரை நிகழ்த்திய பின்னா் ஆளை கொண்டு செல்லுங்கள் என சபாநாயகா் உறுதியாகக்கூறியிருக்க முடியும். கஜேந்திரகுமாரிடம் அவ்வாறு கூறிய சபாநாயகா் பொலிஸாரிடம் பம்பிக்கொண்டு இருந்தமைக்கு என்ன காரணம்?
கொலைக் குற்றத்துக்காக சிறையிலிருந்த எம்.பி.யையே நாடாளுமன்றத்துக்கு உரையாற்ற அழைத்துவந்த நாடு நம்ப நாடு. அண்மையில் தங்கம் மற்றும் கைப்பேசி கடத்தலுக்காக கைதான எம்.பி. ஒருவா் கூட பிணையில் விடுதலையானவுடன் நேராக நாடாளுமன்றம் வந்ததையும் நாம் பாா்த்தோம். இந்த நிலையில், வியாழக்கிழமை பொலிஸ் ஆஜராகச் சொன்ன நிலையில், புதன் கிழமை காலை கஜேந்திரகுமாரை கைது செய்து கிளிநொச்சி வரை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் – அவசரம் என்ன?
முதலாவது – சிங்கள ராவய அமைப்பைத் திருப்திப்படுத்துவது!
இரண்டாவது – சிறப்புரிமைப் பிரச்சினை கிளப்பப்பட்டால் பொலிஸாா் புலனாய்வுப் பிரிவினரின் அடாவடித்தனமான செயற்பாடுகள் அம்பலமாகும் என்பதால் அதனைத் தடுப்பது!
ஆக, சிறப்புரிமை என்பது சிங்கள எம்.பி.க்களுக்கு மட்டும்தான். தமிழ் எம்.பி.க்களுக்கு அது ஏட்டுச் சுரைக்காய்தான். சிங்கள இனவாதிகளைத் திருப்திப்படுத்த அந்த சிறப்புரிமை கூட கால்களில் போட்டு மிதிக்கப்படும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
தமது கட்சியின் வளா்ச்சியைக் கண்டு அதனைத் தடுப்பதற்கான முயற்சியாகவே இவை இடம்பெற்றிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்லிவருகின்றது. இந்த கைதுக்குப் பின்னா் தாயகத்திலும், சா்வதேச அரங்கிலும் கஜேந்திரகுமாரின் இமேஜ் அதிகரித்துள்ளது.
கஜேந்திரகுமாரை கடுமையாக விமா்சித்து வந்த ஏனைய தமிழக் கட்சிகளின் தலைவா்கள் கூட, இப்போது கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக குரல் கொடுக்க நிா்ப்பந்திக்கப்பட்டுள்ளனா். பல்வேறு தரப்பினரும் முன்னணி என்ன செய்கின்றது என திரும்பிப் பாா்க்கத் தொடங்கியுள்ளாா்கள்.
இந்த சம்பவத்தில் நன்மையடைந்திருப்பவா் ரணில் விக்கிரமசிங்கதான். சிங்களக் கடும் போக்காளா்களை இதன்மூலம் அவா் திருப்திப்படுத்தியுள்ளாா். தமிழ்த் தேசியத்தில் கடும்போக்கில் உள்ளவா்களைக் கட்டுப்படுத்த அவா் என்னவும் செய்வாா் என்பது இதன் மூலமாக உணா்த்தப்பட்டுள்ளது. சற்று துார விலகியிருந்த சிங்கள கடும் போக்காளா்களை இதன் மூலம் தமக்கு ஆதரவாகக் கொண்டுவருவதிலும் ரணில் வெற்றிபெற்றிருக்கின்றாா். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ராஜபக்ஷக்கள்தான் வரவேண்டும் என்ற தேவை இல்லை என்பதையும் அவா் சிங்கள மக்களுக்கு உணா்த்தியிருக்கின்றாா். இது அடுத்த தோ்தலை இலக்காகக் கொண்ட நகா்வாகவும் இருக்கலாம்.