விரிவாக்கப்பட்ட நிதி வசதிச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து, அவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பெரும்பாகப் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் எட்டப்பட்டுள்ள அடைவுகள் என்பன குறித்து ஆராயும் நோக்கில் கடந்த 24 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதந்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான அதிகாரிகள் குழு, செவ்வாய்க்கிழமை (30) வரை நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர்.
அதனையடுத்து தமது அவதானிப்புக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினரால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதிர்வருங்காலத்தில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவின் வருகையின்போது மேற்கொள்ளப்படும் 7 ஆவது மதிப்பீட்டின்போது விரிவாக ஆராயப்படும்.
மத்திய கிழக்கு யுத்தம் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 1.6 சதவீதமாகக் காணப்பட்ட முதன்மைப் பணவீக்கம், மே மாதம் 5.5 சதவீதமாக உயர்வடைந்தது. இக்காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகையிலும், வெளிநாட்டுக் கையிருப்பின் பெறுமதியிலும் வீழ்ச்சியொன்று பதிவானது. இவற்றின் விளைவாக அரசாங்கம் எரிபொருள், மின்சாரம் மற்றும் உர மானியங்களையும், வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கான நிதியுதவி வசதிகளையும் அறிமுகப்படுத்தியது.
அதேவேளை வரிக் கட்டமைப்பை வலுப்படுத்தல், வரி அடிப்படையை விரிவுபடுத்தல் மற்றும் செலவின நிலுவைகள் உருவாவதைத் தடுத்தல் என்பன உள்ளடங்கலாக பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரவேண்டும்.



