முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை தொடர்ந்து விசாரணைகளிற்கு பிரதமர் இடமளிக்கக்கூடாது-அருட்தந்தை மா.சத்திவேல்

330 Views

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து விசாரணைகளிற்கு பிரதமர் இடமளிக்கக் கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்போடு முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் தமிழர் தாயகத்தின் பல்வேறு இடங்களிலும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மிகவும் உணர்வு பூர்வமாக ஈகை சுடரேற்றும் நிகழ்வு நடாத்தபடவுள்ளது. அந்நாளில் அரசியல் பிரகடனமும் செய்யப்படும். இதற்கு

எந்த வகையிலும் எவராலும் தடைகளோ, அதனை நடத்துகின்றவர்களுக்கு நிகழ்வை தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதற்கோ புதிய பிரதமர் இடமளிக்கக்கூடாது. “கோட்டா கோ கம ( கோட்டா போ கிராமம்) போராட்டத்திற்கு தடை ஏற்படாது” என கூறியதைப் போன்று முள்ளிவாய்க்கால் சுடரேற்றும் நிகழ்வுக்கும் தடைகள் ஏற்படாது அதனை நடத்துவதற்கு இடம் அளிப்பது ஜனநாயகமாகும்.

கடந்து 2015ஆம் ஆண்டைத் தொடர்ந்து மைத்திரி மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சிக் காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பாரியதடைகள் இருக்கவில்லை. ஆனால் 2019 ஆம் ஆண்டிலிருந்து கோத்தா ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினரால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நடந்தது.

இதனை ஒழுங்கு செய்தவர்கள், பங்கேற்றவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு காரணமின்றி விசாரணைக்கும் அழைக்கப்பட்டனர். இது போரில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டவர்களை கூட்டாக நினைவு கூறுவதையும் வலி சுமக்கும் மக்கள் ஆறுதல் அடைவதையும் தடுக்கும் அநாகரிக செயலாயும் அமைந்தது. இது இனியும் நடக்கக் கூடாது என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஏனெனில் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து கொந்தளிக்கும் அடித்தட்டு மக்கள் பல்வேறு பிரதேசங்களிலும் போராட்டம் நடத்துவதோடு கொழும்பில் காலிமுகத்திடலில் இளைஞர்களால் தொடர் போராட்டம் நிகழ்த்தப்படுகின்றது.

அவசரகால சட்டம், ஊரடங்கு சட்டம் அறிவித்த நிலையிலும் போராட்டம் தொடர்வதை தமிழ் மக்கள் அவதானித்து வருகின்றனர். இவற்றிற்கு பாரிய அளவில் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை முன்னால் பிரதமரின் அடவாடித்தனத்தைத் தவிர நடத்துபவர்களை விசாரணை என அழைக்கவில்லை.

இதனைவிட தற்போதைய புதிய பிரதமர் “கோட் கோ கம” ( கோட்டா போ கிராமம்) மீது கை வைக்க மாட்டேன்” என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது அவரின் அடுத்த கட்ட அரசியல் இராஜதந்திர செயற்பாடாக இருக்கலாம். எனினும் இக் கூற்று போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது. போராட்ட சுதந்திரத்தையும் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கதே.

காலிமுகத்திடல் நடக்கும் போராட்டமும் அதனையொட்டி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும் போராட்டம் வயிறு மற்றும் பொருளாதாரம் சார்ந்தது. மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிவிட்டால் போராட்டம் நகரும், அதற்கு ஆயுள் இல்லை என பிரதமர் நினைத்திருக்கலாம். ஆதலால் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருக்கலாம்.

ஆனால் வடகிழக்கு மக்களின் போராட்டம் தமிழர்களின் வாழ்வோடும், உயிரோடும், இரத்தத்தோடும் கலந்த நீண்டகால அரசியல் போராட்டமாகும். இன அழிப்பு, இனப்படுகொலை, உடைமைகள் இழப்பு, அவர் இழப்பு என்பவற்றிற்கு முகங்கொடுத்த மக்கள், இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் கொலைகளை நேரில் பார்த்தனுபவித்தவர்கள் அரசியல் இலக்கை அடைவதில் உறுதியோடு மக்கள் சக்தியாக திரண்டு வருடா வருடம் மே பதினெட்டில் ஈகைச்சுடர் ஏற்றுகின்றனர். இது தமிழர்களின் அரசியல்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு வித்திட்டு ஆதரவளித்தவரும் தற்போதைய பிரதமரே இவர் பிரதமராக தலைமையேற்று இருக்கும் இக் காலகட்டத்தில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ, கோசங்களோ இன்றி அமைதியான முறையில் உயிர்த்தியாகமானவர்களை நினைந்து அவர்களுக்கு ஈகைச் சுடரேற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்துவது ஏற்படுத்துவதற்கும் இடமளிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ராஜதந்திர ரீதியில் தமிழ் மக்களை அணுகவும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தெற்கின் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் வடக்கின் மக்களுக்கு கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தம்முடைய துயர் போக்கவும் வலிகளை ஆற்றிக் கொள்வதற்கும் துணை நிற்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Tamil News

Leave a Reply