ஜனாதிபதி ஐ.நா செயலாளரை சந்தித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியமை நகைப்புக்கிடமானது. அருட்தந்தை மா.சத்திவேல்

149 Views

IMG 20201202 WA0004 1 1 1 4 ஜனாதிபதி ஐ.நா செயலாளரை சந்தித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியமை நகைப்புக்கிடமானது. அருட்தந்தை மா.சத்திவேல்

ஐ.நா கூட்டத் தொடருக்கு முன், ஜனாதிபதி ஐ.நா செயலாளரை சந்தித்து அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதாக கூறியமை நகைப்புக்கிடமானது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இன்று அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத் தொடருக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ கோட்ரஸ் அவர்களோடு மேற்கொண்ட பிரத்தியேக சந்திப்பின்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளமை அரசியல் காய் நகர்த்தல் ஆக நாம் சந்தேகம் கொள்கின்றோம்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கடிதம் கொடுத்தும் அதற்கு உரிய பதில் அளிக்காதவர், தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பதாகக் கூறி பின்னர் காலவரையறையற்று பின் போட்டவர் ஐ.நா செயலாளரை சந்தித்து உள்நாட்டு பொறிமுறை ஊடாக பிரச்சினை தீர்ப்பதாகவும் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதாகவும் கூறியமை நகைப்புக்கிடமானது. ஏனெனில் நீண்ட காலமாக தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக உள்நாட்டில் வாக்குறுதிகளை கொடுக்க முடியாதவர்கள் சர்வதேசத்திற்கு சென்று வாக்குறுதிகள் கொடுக்கின்றார்கள் எனில் அதில் தங்களுடைய அரசியல் உள்நோக்கம் மட்டுமே தங்கியிருக்கும். அதற்காகவே தற்போதைய ஐ.நா கூட்டத்தொடரை பயன்படுத்துவதாகவே தோன்றுகிறது.

2009ஆம் ஆண்டு பாரிய இனப்படுகொலையுடன் இன அழிப்பை மேற்கொண்ட இராணுவத்தை பாதுகாக்கும் பேரினவாத நோக்கம் கொண்டே கடந்தகால ஆட்சியாளர்களும் தற்போதைய ஆட்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் இராணுவம் இழைத்த குற்றங்களையும் அந்த குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கப்படக்கூடாது என்ற மனநிலையில் ஆட்சியாளர் இருப்பதையும் தமிழர்கள் அறிவார்கள். அதுமட்டுமல்ல யுத்த குற்றங்களுக்கெல்லாம் முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தற்போதைய ஜனாதிபதியும், அவரை சூழ உள்ள இராணுவ உயர் நிலை அதிகாரிகளுமே. இவர்கள் தம்மை தண்டனைக்கு உள்ளாக்க போவதுமில்லை.

இதனால்தான் உள்நாட்டு பொறிமுறை விடயத்தில் தமிழ் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையில் வடக்கு கிழக்கில் ஐ.நா பிரதிநிதித்துவத்தை வேண்டி நிற்பதோடு பிரச்சினைக்கு நீதி தீர்வு சர்வதேச மத்தியஸ்தத்தின் தலையிட்டால் மட்டுமே கிடைக்குமென்ற நம்பிக்கையில் சர்வதேசத்தை நோக்கி நீதி குரல் எழுப்பி கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் இனியும் இவர்களுடைய பசப்பு வார்த்தைகளுக்கோ சர்வதேசத்திற்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளுக்கோ ஏமாறுவதற்கு ஆயத்தம் இல்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் இன அழிப்பு மட்டுமே தீர்வு என்று செயற்படுகின்றனர். தமிழர்களுக்கு தீர்வும் கொடுக்க கூடாது என்பதுதான் பேரினவாத ஆட்சியாளர்களின் நிலைப்பாடு.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 16 அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் வீடுகளுக்கு அனுப்பி அரசியல் நாடகமாடினார். நீதிமன்ற நடவடிக்கைகளில் எதிர்வரும் மாதங்களில் வீடுகளுக்கு செல்ல இருந்தவர்களையே பொதுமன்னிப்பின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பினர். அதனையே ஐக்கிய நாடுகள் செயலாளரிடம் அரசியல் கைதிகளை விடுவித்ததாக மார்தட்டிக் கொண்டு அரசியல் பித்தலாட்டம் நடத்துகின்றனர்.

பதவிக்கு வந்த உடனேயே தனது அதிகாரத்தை அதிகரித்து கொள்வதற்காக அவசர அவசரமாக அரசர்கள் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தவர்கள் மிக நீண்டகாலமாக சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிய பயங்கரவாத தடை சட்டத்தை அகற்றுவதற்கு துணியவில்லை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியபோதும் அதற்கும் எத்தகைய நடவடிக்கையையும் இல்லாதவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தை தொடர்ந்து பாதுகாத்து கொண்டு அச்சட்டத்தின் கீழ் கைதிகள் நடந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சட்டத்தை திருத்தி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது என்பது சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான ஒரு உத்தி எனலாம்.

இரவிரவாக காணாமல் போனோர் அலுவலகம் திறப்பதும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு சலுகைகளை அறிவிப்பதும், அரசியல் கைதிகளை விடுவிப்பது என்பதும் யுத்தக் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை மறைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பார் நீதியை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்.

இனவாதம் பேசி ஆட்சியை கைப்பற்றி அவர்கள் இனவாதத்தை காவலர்களை பாதுகாப்பவர்கள் அடுத்த தேர்தலுக்கு முன்னர் வீழ்ந்து கொண்டிருக்கின்ற பொருளாதாரத்தை சமாளிக்கத் தமிழர் பிரச்சினையை தமக்கு சாதகமாய் சர்வதேச அரங்கில் பயன்படுத்த முனைவது இன அழிப்பின் நீட்சிக்கே” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply