புத்தரின் புனிதப் பொருட்களை சுமந்துகொண்டு ஆரம்பிக்கப்படும் அமைதிக்கான பாதயாத்திரைக்கு ஜனாதிபதி ஆதரவு

IMG 20260421 WA0128 புத்தரின் புனிதப் பொருட்களை சுமந்துகொண்டு ஆரம்பிக்கப்படும் அமைதிக்கான பாதயாத்திரைக்கு ஜனாதிபதி ஆதரவு

இலங்கையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள அமைதிக்கான பாதயாத்திரைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற உலக அமைதி பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்காக, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த துறவிகள் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை நாட்டை வந்தடைந்தனர்.

இந்த அமைதிப் பயணத்தின் ஒரு அங்கமாக, ‘ஆலோகா’ என்ற பெயருடைய நாயும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பாதயாத்திரை இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை அரச அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு, அன்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்றையதினம் ஆரம்பிக்கப்படும் நாடளாவிய அமைதிப் பாதயாத்திரையை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தம்புள்ளையிலிருந்து புத்தரின் புனிதப் பொருட்களையும் போதி மரக்கன்று ஒன்றையும் சுமந்துகொண்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர்,

“இந்தப் புனிதப் பயணத்தின் போது நமது பாரம்பரியத்தை வரையறுக்கும் அமைதி மற்றும் கருணையின் நிலையான மதிப்புகளைப் பற்றி சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் அழைக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆன்மீக முயற்சி தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, உலக சமுதாயத்திற்கு அமைதியின் ஆழமான செய்தியை எடுத்துரைக்கும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.