வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு பகுதியில் அரச காணி சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து, பிரதேச செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜே/420 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தின் போது, அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டன.
புலம்பெயர் நாட்டில் வசித்து வரும் நபர் ஒருவர், போலி ஆவணங்களைத் தயாரித்து அரச காணியை சுமார் 90 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பாக கிராம முன்னேற்றச் சங்கத்தினால் இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச செயலகத்தின் மந்தகதியிலான செயல்பாட்டினால், மக்கள் இந்த விடயத்தை வடமாகாணக் காணி ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த காணி அரச காணி என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், ஆணையாளரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனப் போராட்டக்காரர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அரச காணியைத் தனியார் காணியாக மாற்றுவதற்கு அதிகாரிகள் துணை போகிறார்களா என கேள்வி எழுப்பியதுடன், முறைப்பாடு செய்ய வரும் பொதுமக்களைப் பிரதேச செயலாளர் மரியாதையற்ற முறையில் நடத்துவதாகவும் குற்றம் சுமத்தினர்.
போலி ஆவணங்கள் மூலம் அரச காணியை விற்ற நபர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தின் நிறைவில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைப் பிரதேச செயலகத்தில் கையளித்த மக்கள், உரிய தீர்வு கிடைக்காவிடில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.



