அதிபர் புட்டின்”ஒரு போர்க் குற்றவாளி” அமெரிக்கா- இது “மன்னிக்க முடியாத சொல்லாட்சி” ரஷ்யா

472 Views

போர்க் குற்றவாளி

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக “போர்க் குற்றவாளி” என்று  தெரிவித்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, இது “மன்னிக்க முடியாத சொல்லாட்சி” என்று கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, பத்திரிகையாளர் ஒருவர், “இதுவரை நடந்ததை பார்த்த பின்பு, நீங்கள் புட்டினை ஒரு போர்க் குற்றவாளி என்று அழைப்பதற்கு தயாராக உள்ளீர்களா?” என்று கேட்டார்.

இந்த கேள்விக்கு முதலில் ‘இல்லை’ என்று பதிலளித்த பைடன், பிறகு உடனடியாக, “நான் குறிப்பிடுவேனா என்று கேட்டீர்களா? ஆம், அவர் ஒரு போர்க் குற்றவாளி என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

இந்நிலையில், உக்ரைனில்  நடந்த தாக்குதலின் “காட்டுமிராண்டித்தனமான” படங்களைப் பார்த்த பிறகு பேசிய பைடன் இதை அதிகாரபூர்வ அறிவிப்பாக இல்லாமல், தனது இதயத்திலிருந்து பேசியதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி பின்னர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், போர்க்குற்றங்களை தீர்மானிப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறையில் தனியே சட்டச் செயல்முறை இருப்பதாகவும், அதற்கான பணிகளும் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ்ஸிடம் அந்த நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த குண்டுகளுக்கு பின்னணியில் உள்ள ஒரு நாட்டின் அதிபரின் இத்தகைய சொல்லாட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மற்றும் மன்னிக்க முடியாதவை என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறியுள்ளார்.

Leave a Reply