அவசர கால நிலை பிரகடனம் – யாழில் முன்னெடுக்கப்பட இருந்த கண்டன பேரணி ஒத்திவைப்பு

407 Views

கண்டன பேரணி ஒத்திவைப்பு

கண்டன பேரணி ஒத்திவைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை ஞாயிறுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட இருந்த கண்டன பேரணி சில தினங்களுக்கு ஒத்திவைக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அவசரகால நிலை பிரகடனத்தின் மூலம் எமது உறவுகள் மேலும் பாதிப்பிற்குள்ளாகும் சூழல் காணப்படுவதையிட்டு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி நடராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளைய தினம் (03) யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து முற்றவெளி மைதானம் வரை கண்டன பேரணியாக சென்று எதிரப்பினை வெளிப்படுத்த ஏற்பாடுகள் செய்திருந்தோம்.

இந்நிலையில் கடந்த இரவு முதல் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு சிறிலங்கா மக்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்குவது மட்டுமல்ல வழமையாக சாதாரண சூழ்சிலை இருக்கும் போதுகூட எமது தமிழினம் அதுவும் பாதிக்கப்பட்ட எமது உறவுகள் இரும்பு கரம் கொண்டு குரல்வளை நசிக்கப்பட்டு சகல சுதந்திரங்களும் பறிக்கப்பட்ட நிலையிலேயே இந்த அவசர கால நிலை பிரகடனமானது எமது போராட்டத்தை நசுக்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதாலும் எமது உறவுகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குவதை தவிர்க்கும் முகமாகவும் ஓரிரு தினங்கள் அதனை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

நாட்டு நிலமைகளை சீர்தூக்கிபார்த்து இந்த போராட்டம் திரும்பவும் நடைபெறும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆட்டம் கண்டுள்ள இலங்கை அரசின் போராட்டங்களை தடுக்கம் முடிவால் நாளைய போராட்டத்தை தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்களின் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply