உள்ளூராட்சித் தேர்தல் வேட்பு மனுக்கள் கோருவதை மார்ச் 21வரை பிற்போடுங்கள்: கஜேந்திரகுமார் எம்.பி. அழுத்தம்

வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி முடியும்வரையில் வேட்பு மனுக்களைக் கோரவேண்டாம். உடனடியாக வேட்புமனுக்களைக் கோரினால் பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்க முடியாது போகலாம் – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உள்ளூராட்சித் தேர்தலுக்கு உடனடியாகவே வேட்புமனுக்களைக் கோருவீர்களாயின் அந்தத் தருணத்தில் என்னால் இந்த நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது போகும். நான் வேட்புமனுப் படிவங்களை நிரப்பச் செல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு படிவத்திலும் கையொப்பமிட வேண்டிய நபர் கட்சியின் செயலாளராகிய நான்தான். அப்படியானால் இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் என்னால் எப்படிப் பங்கேற்க முடியும்? இந்த விவாதத்துக்கு வந்து பங்களிப்பதற்காகவே எனது மக்களிடமிருந்து எனக்கு ஆணை கிடைத்துள்ளது. இது எனக்கு மட்டுமல்ல இங்குள்ள அனைவருக்கும் உள்ளது.

தேர்தல் தள்ளிப்போகிறது என்று நீங்கள் குறிப்பிடுவது நியாயமானது. 3 மாதங்களுக்கு மேல் ஒரு நாள் கூட மேலதிகமாக நாங்கள் கேட்கவில்லை. மார்ச் 21ஆம் திகதிவரை வேட்புமனுக்களைக் கோர வேண்டாம் என்றே கேட்கின்றேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்துமாறே உச்ச நீதிமன்றம் சொல்கிறது. தற்போது நடைமுறைச் சிக்கல் இருப்பதை நாம் அனைவரும் ஒன்றுகூடி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சொன்னால், ஆணைகுழுவினரும் நாங்கள் கேட்கும் நியாயத்தன்மையை வெளிப்படையாகப் புரிந்துகொள்வார்கள். மார்ச் மாதம் 21ஆம் திகதி வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு முடியும் வரை இங்கு வந்து பேச வேண்டும், அதுதான் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற எங்களுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு.

அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் ஆணைக்குழவை அணுகி, மார்ச் 21 ஆம் திகதிக்குப்  பின்னர் நியாயமான திகதியைக் கேட்டால் அவர்கள் பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்படிச் செய்யாமல் இருப்பது எங்களைப் போன்ற கட்சிகளின் வாக்குரிமையை திட்டமிட்டு மறுப்பதாகவே அமையும்- என்றார்.