ரஷ்யா- உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தல்

ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தொடங்கி 8  மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் ‘இன்னும் எவ்வளவு இரத்தம் ஓட வேண்டும்’ என  கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24ஆம் திகதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து இராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். எட்டு மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு தொடர்கின்றது. இரு நாடுகளின் போரானது அந்த பிராந்தியத்தை மட்டுமல்லாது உலக நாடுகளில் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போரினால் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடையும் விதித்துள்ளன.

இந்நிலையில், வாடிகனில் உரை நிகழ்த்திய திருத்தந்ததை பிரான்சிஸ், ‘ எனது வேண்டுகோள் முதலில் ரஷ்ய கூட்டமைப்பின் தலைவருக்கு உரையாற்றப்படுகிறது, இந்த வன்முறை மற்றும் மரணத்தின் சூழலை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் அவரது சொந்த மக்களுக்காகவும். மறுபுறம்,  ஆக்கிரமிப்புகளின் விளைவாக உக்ரைனிய மக்கள் படும் பெரும் துன்பங்களைக் கண்டு வருத்தமடைந்த நான், அமைதிக்கான முன்மொழிவுகள் தொடர்பாக உக்ரைன் அதிபருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த மாதங்களில் சிந்திய இரத்தம் மற்றும் கண்ணீர் ஆறுகளால் நான் வருத்தப்படுகிறேன். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர், குறிப்பாக குழந்தைகள், மற்றும் பல மக்களையும் குடும்பங்களையும் வீடற்றவர்களாக ஆக்கிய அழிவால் நான் வருத்தமடைகிறேன்’ என்றுதெரிவித்துள்ளார்.