பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்- அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளை விடுதலை

அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து மீட்சி அளிக்கவும், இன நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் கருதி பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இலக்கு ஊடகத்தில் இருந்து தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கரு த்து தெரிவிக்கையில்,

தென் ஆபிரிக்காவின் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ,வெள்ளை மற்றும் கறுப்பு இன மக்களுக்கு இடையில் சமாதானத்தையும், பாதிக்கப்பட்ட கறுப்பு இனத்தவருக்கு அரசியல் நீதியையும், இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உழைத்து வெற்றி கண்ட பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்களின் இறுதி மரணச்சடங்கு பிறந்திருக்கும் புது வருடத்தின் முதல் நாளில் நடந்திருக்கிறது. அவர் சர்வதேசத்துக்கு விட்டு சென்ற  நல்லிணக்க செயற்பாட்டைப் புதைக்கக் கூடாது. அது தொடர்வதற்கான செயற்பாட்டில் இலங்கை ஆட்சியாளர்கள் நாட்டம் கொண்டுள்ளனர் என்பதற்கு அடையாளமாக  அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அவருக்கு செய்யும் கௌரவமாக அமைவதோடு அரசியல் நீதியை தேடிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அரசியல் தீர்வுக்காக சர்வதேசத்தை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

Tamil News