கிழக்கு மாகாண கல்வியில் அரசியல் தலையீடுகள் -இலங்கை ஆசிரியர் சங்கம்

428 Views

கல்வியில் அரசியல் தலையீடுகள்

கிழக்கு மாகாண கல்வியில் அரசியல் தலையீடுகள் பாரிய பிரச்சினையாக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டன்லி தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் உள்ள  கிழக்கு மாகாணத்தின் கல்வி செயற்பாடுகள் ஏனைய ஒன்பது மாகாணங்களை விட பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி ஆலோசகர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பல தடவைகள் கிழக்கு மாகாண ஆளுநர்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,கல்விப்பணிப்பாளர்களின் கவனத்திற்கு வலய கல்வி பணிப்பாளர்களினால் கொண்டு செல்லப்படுகின்ற போதிலும் எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.

இதற்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.வலய கல்விப்பணிப்பாளர்கள் நியமனங்கள் மற்றும் அதிபர்கள் நியமனத்திலும் உரிய தகைமையுள்ளவர்களுக்கு வழங்கப்படாமல் அல்லது நியனக்கொள்கைகளுக்கு மாறான வகையில் நியனமங்கள் வழங்கப்படுகின்றது.

அதிபர்,ஆசிரியர்கள் இடமாற்றங்கள் தொடர்பிலும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளது. அரசியல்வாதிகளுக்கு தேவையான வகையிலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

கல்வியை ஜனநாயக முறையில் கொண்டு செல்ல வேண்டும். பரீட்சை கடமைகள் ஈடுபடுவதற்காக நியமனம் செய்யப்படுகின்றவர்களும் இன்று அரசியல் ரீதியாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஒரு ஆசிரியருக்கு கூட பரீட்சை கடமைகளில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

தேசிய பாடசாலையின் அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள், கல்விச்சமூகம், தொழிற்சங்கம் என்பன ஒன்றாக இணைந்து போராடியபோதும் அந்த அதிபர் தொடர்ச்சியாக அங்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது பரீட்சை கடமையினை ஆசிரியர்களுக்கு வழங்காததற்கு.

இந்த சிறிய செயலே இந்த கல்வி நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் தலையீடு எவ்வாறு உள்ளது என்பதற்கு உதாரணமாகும். இது தொடர்பில் பரீட்சைகள் ஆணைக்குழுவுக்கும் அறிவித்துள்ளோம்.பரீட்சை கடமைக்கு நியமனம்பெறுவதற்கு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லவேண்டிய நிலையுள்ளது.

Tamil News

Leave a Reply