2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும், கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் தனித்தனியாகத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, குற்றவாளிகள் 15 பேருக்கும் தலா 200 ஆண்டுகள் முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 5 குற்றவாளிகளுக்கு தலா 200 ஆண்டுகளும் மேலும் 5 குற்றவாளிகளுக்கு தலா 220 ஆண்டுகளும் 4 குற்றவாளிகளுக்கு தலா 240 ஆண்டுகளும் 1 குற்றவாளிக்கு 260 ஆண்டுகளும் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த சட்ட நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தினால் நேற்று (22) அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட 24 பேரில், 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஏனைய 9 பேரும் இந்த வழக்கில் இருந்து முற்று முழுதாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராக 23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதேவேளை குற்றவாளிகளை சிறைக்கு அழைத்து சென்ற போது “தாங்கள் குற்றம் இழைக்கவில்லை” என்று அவர்களில் சிலர் ஊடகங்களிடம் கூறிச் சென்றனர்.



