ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்; ஜே.வி.பி.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்; ஜே.வி.பி.“தற்போதைய ராஜபக்ஷாக் களுடைய அராசாங்கத்தின் மக்கள் மீதான அடக்கு முறைகள் துரிதமடைந்து கொண்டிருக்கின்றன. இதற்கான எடுத்துக் காட்டாக நாடாளுமன்ற முன்றலில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது தொழிற் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டமையைக் குறிப்பிடலாம்” என ஜே.வி.பி.யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;

“தற்போதைய ராஜபக்ஷா க்களுடைய அராசாங்கத்தின் மக்கள் மீதான அடக்கு முறைகள் துரிதமடைந்து கொண்டிருக்கின்றன. இதற்கான எடுத்துக் காட்டாக நாடாளுமன்ற முன்றலில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது தொழிற் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டமையைக் குறிப்பிடலாம்.

மேலும், இலவசக் கல்விக்குச் சாவுமணி அடிக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை நிறைவேற்று வதற்கான மூஸ்தீபுகளும் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. 2/3 பெரும்பான்மை உள்ளதால் ராஜபக்ஷாக்களின் அரசாங்கமானது எதேச் சதிகாரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொரொனாவையும், தனிமைபடுத்தல் சட்டத்தையும் பிரயோகித்து மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களையும் அடக்கு முறைகளையும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதையும் இலகுவாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எந்தவொரு வாக்குறுதியையும் இந்த அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்ற வில்லை.

நாட்டின் பொருளாதாரமானது மிகுந்த சீரழிவின் பால், இட்டுச் செல்லப் பட்டிருப்பதோடு, மக்களின் அன்றாடச் சீவனோ பாயமும் மிகவும் பரிதாபமாக முடக்கப் பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஈவிரக்கமின்றி அதிகரிக்கப் படுகின்றன. எண்ணெய விலையும் அதிகரிக்கப் பட்டுள்ளது. உலகச் சந்தையில் எண்ணெய விலையில் அதிகரிப்பு ஏற்படும் போது அதை நிவர்திச் செய்வதற்கான ரூ 20 ஆயிரம் கோடி எண்ணெய கட்டுப்பாட்டு நிதியத்தை அமைத்து மக்களுக்கு மானியம் தருவதாக கூறப்பட்டது. ஆனால் இன்று அந்த நிதியத்துக்கு நேர்ந்த கதி என்ன வென்று யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.

உரம் இலவசமாக வழங்குவோம் எனக்கூறி இந்நாட்டு விவசாயிகளின் அதிகளவு வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்த இவ்வரசாங்கம் அவ்வாக்குறுதி களையும் நிறைவேற்ற வில்லை. அதனால் இன்று நாட்டு மக்கள் ஏதாவது ஒரு உரத்தை தா என அரசாங்கத்திடம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கும் செவி மடுக்காத அரசாங்கம் அவர்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

எங்கேயோ சென்றுக் கொண்டிருந்த கப்பலை இரண்டு நாடுகள் தமது துறைமுகத்திற்கு வரவேண்டாமென அனுமதி மறுத்த போதிலும் கூட, அந்தக் கப்பலை எமது நாட்டுக்கு வரவழைத்து எமது கடல் வளம், சமுத்திர வளம் ஆகியவற்றை நாசப்படுத்திய இவ்வரசாங்கம் மீன்வர்களின் வாழ்வா தாரத்திற்குச் சாவுமணி அடித்து சாதனை படைத்துள்ளது. இந்நாட்டின் கடல் வளத்தைச் சற்றேனும் கருத்திற் கெடுக்காமல் ‘டொலர்’ ஒன்றுக்காவே அரசாங்கம் இவ்வாறான நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கொரொனா நோயாளிகளிகளை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலும் அயராது சேவையாற்றும் வைத்தியர்கள், தாதியர், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றாதது மட்டுமல்ல அவர்களின் கோரிக்கைளையும் கிடப்பில் இட்டு அவர்களை தமது உரிமைகளை கேட்டு ஆர்பாட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டு மக்கள் விரோத அரசாங்கமாக உள்ள தற்போதைய அரசு உடனடியாக வைத்திய, சுகாதார பகுதியினருக்குத் தேவையானவற்றையும் அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென இந்த அரசாங்கத்தை வலியுறுத்து கின்றோம்.

அத்தோடு, இலவசக் கல்வியை ஒழித்துக் கட்டுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டு ள்ளதாக தெரிய வருகின்றது. இதன் விளைவே கொத்தலாவல பல்கலைக் கழகச் சட்ட மூலமாகும். ரணில் – மைத்திரி அரசாங்கத்தில் இச் சட்டம் அமுலாக்கப்பட இருந்ததை அன்று கடுமையாக எதிர்த்தவர்கள் ஆனால் இன்றோ அவர்களே இச் சட்ட மூலத்தை கொண்டு வந்து இலவசக் கல்விக்கு சாவுமணி அடிக்கத் தயாராகி வருகின்றனர்..

அன்று இச் சட்டமூலத்திற்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது மாணவர் ஒருவர் உயிரிழந்துமுள்ளார். இலவசக் கல்வி ஒழிப்பு தனியார் வைத்தியசாலை போன்ற விடயங்களில் உண்மையை அறியும் உரிமை இந்நாட்டு மக்களுக்கு உண்டு. ஒன்லைன் கல்வி பெறும் வாய்ப்பை இந்நாட்டு வசதியான மாணவர்கள் மட்டுமே பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு அற்றுப் போயுள்ளது. இப்பாகுபாட்டை நிவர்த்திச் செய்வதற்காக அரசாங்கம் கூறும் தீர்வுதான் என்ன?

தேசத்தின் பௌத்த பிக்குகள் இணைந்து இவ்வாட்சியைப் பதவியில் அமர்த்தினார்கள். தற்போது ஒன்றரை ஆண்டுப் பதவிக் காலத்திற்கு உள்ளேயே அவர்கள் அனைவரும் அரசின் மீது அதிருப்தியடைந்து இவ்வரசை விரட்டியடிக்க வேண்டும் என்னும் அவாவோடு காணப்படுகின்றனர்.

இவ்வரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ம.வி.மு.ன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ‘சமந்த வித்தியாரத்னா’ அகில இலங்கை விவசாயிகளின் சம்மேளனத் தலைவர் நாமல் கருணரத்னா, ஆகியோர் கைது செயய்ப்பட்டும் உள்ளனர். இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்கா அவர்களும் ஜாஎலலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் போது அரசினால் பயமுறுத்துவ தோடு கொலை செய்யவும் படுகிறார்கள். அத்தோடு காணாமல் ஆக்கபப்ட்டும் உள்ளனர். லசந்த விக்கிரமதுங்கா, எக்லியக்கொட, போத்தல ஜயந்த, கீத் நெயார் ஆகியோர் இவ்வரிசையில் குறிப்பிடத் தகவர்களாக விளங்குகின்றனர்.

ஒன்றரை வருடங்காளக ராஜபக்ஷாக்கள் ஆட்சி செய்த போதிலும் கூட நாட்டின் பாதுகாப்பை, உறுதிப்படுத்தவோ, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பவோ அவர்களால் முடியவில்லை. மாறாக நாட்டின் காடுகள், நாட்டின் காணிகள் உள்ளடங்கலாக சகல சொத்துக்களும் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு விற்பனையாக்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க பிரசையான ‘பசில் ராஜபக்ஷா’ அவர்களுக்கு மேலதிகமாக பதவிகள் வழங்கப்பட இருப்பதாக தெரிய வருகின்றது.

பசில் ராஜபக்‌ஷ முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த போது கொரொனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் நியமிக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. முடிவாக, ராஜபக்‌ஷக்கள் மூவரைத் தலைவர்களாகக் கொண்ட குடும்ப ஆட்சியே தற்போது இலங்கையில் நிலவுவதாக கூறலாம் ’03’ முட்டாள்களான (3 Idiots) மும்மூர்த்திகளின் ஆட்சியினால் நமது நாடு அதாள பாதளத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறதெனலாம்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முதன்மையாகக் கொண்ட ஸ்ரீலங்க பொதுசன முன்னணி ஆட்சியாக இருந்தாலும் சரி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்னும் பேருண்மையை இந்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொண்டு முற்று முழுதான ஆட்சி மாற்றமொன்றை அதாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்த அணி திரள வேண்டும். இவ்வணி திரள்வுக்குத் தலைமை தாங்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணிக்குப் போதியளவு யோக்கிய தன்மை உண்டு என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்த விரும்புகின்றோம்.”

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்; ஜே.வி.பி.

Leave a Reply