இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றுமொரு நகர்வே பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம்-கருத்து வெளியிட்டார் விக்னேஸ்வரன்

பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம்வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் தற்போதைய இந்திய விஜயம் தொடர்பாக ‘ரைம்ஸ் எப் இந்தியா’வுக்கு கருத்துவெளியிட்ட போதே விக்;னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது. இந்தியா தமது நட்பு நாடு என அவர்கள் நடிப்பார்கள். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா தலையிடாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக போலியான வாக்குறுதிகளை அவர்கள் வழங்குவார்கள்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவது உட்பட, இந்தியாவுக்கு கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இந்திரா காந்திக்குப் பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அதன் விளைவாகத்தான் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது.

இருந்த போதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் குஜாராத் முதலமைச்சராக இருந்த போது நான் அங்கு சென்றிருக்கின்றேன். அவர் இலங்கையின் போலி வாக்குறுதிகளை நம்பாமல் இலங்கை தொடர்பில் மிகவும் அவதானமாக இருந்து, தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுடைய தொடர்ச்சியான இருப்பை உறுதிப்படுத்தவும் இந்தியப் பிரதமர் துணிச்சலாகச் செயற்படுவார் என இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எம்மை வலுப்படுத்துவதற்காக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும். ஆக, பேராசிரியர் பீரிஸின் பேச்சுவன்மையில் இந்தியா ஏமாற்றுப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.