“இலங்கை ஒரு பல்தேசங்கள் கொண்ட நாடென்பதை ஏற்றுக்கொள்ளாத வரைக்கும் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை அங்கீகரிக்காத வரைக்கும் நீங்கள் எங்களை மட்டுமல்லாது உங்களையும் சேர்த்தே அழிக்கப் போகின்றீர்கள். நாட்டின் ஸ்திரத்தன்மை குலைந்து பிளவடையப் போவது சிங்களத் தலைவர்களாலேயே அன்றி தமிழ் மக்களால் அல்ல. இனப் படுகொலையைப் புரிந்தவர்களைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கும்வரையில் இனப் படுகொலை என்பது தப்பிக் கொள்ளக்கூடிய ஒரு குற்றம் என நம்பிக் கொண்டிருக்கும் வரையிலும் உங்களால் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியாது, பாதுகாப்பாக உணரவும் முடியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
“ரோம் சாசனத்தின் 6வது உறுப்புரையானது இனப்படுகொலைக் குற்றம் என்பதனை வரையறை செய்கின்றது. இந்த சர்வதேச சாசனத்தை இலங்கை அரசு தொடர்ந்து ஏற்க மறுத்து வருவதற்கான காரணம் இன்று வெளிப்படையாகின்றது. அன்று யுத்தம் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நடைபெற்ற சம்பங்களை கடந்த வரவு – செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தின்போது தெளிவாக வெளிப்படுத்தியிருந்தேன்.
அங்கு போர் வலயத்தினுள் சிக்கியிருந்த மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததை ஏற்றுக்கொள்வதெனும் முடிவுக்கு 2009 மே16 இரவு எட்டு மணியளவில் இலங்கை அரசு கொள்கையளவில் முன்வந்திருந்தது. ஆனால், அங்கு சிக்கியிருந்த ஏறத்தாழ ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்களைப் பாதுகாத்து அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரும் செயற்பாடு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜோர்டானில் நடைபெற்றுக்கொண்டிருந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இருந்து மே 17ஆம் திகதி திரும்பிவந்தவுடன் ஆரம்பிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தச் செயற்பாடு நடைபெறவில்லை. 17ஆம் திகதி காலை போர் வலயத்தினுள் சிக்கியிருக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்பதை நான் விடுதலைப்புலிகளுக்கு அறிவித்திருந்தேன்.
ஆனால், 16ஆம் திகதி இரவு 10 மணியளவில் மிகவும் பயங்கரமான செய்திகளைத் தாங்கிய பல தொலைபேசி அழைப்புகள் வன்னியிலிருந்து எனக்கு வந்தன. ஆயுதங்களை மௌனிப்பது எனும் புலிகளின் முடிவை அரசு ஏற்று மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஒத்துக்கொண்ட பின்னரும் கூட போர் வலயத்தை நோக்கி எழுந்தமானமாக கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆட்டிலறித் தாக்குதல்கல் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக அங்கிருந்துவந்த தொலைபேசி அழைப்புகள் கூறின.
நான் உடனடியாகவே 16-05-2009 இரவு 10.30 மணியளவில் பஸில் ராஜபக்சவுடன் தொடர்புகொண்டு “நீங்கள் மக்களின் பாதுகாப்புக்காகவும் நலனுக்காகவுமே அனைத்தையும் (இந்தப் போரை) செய்கின்றோம் எனக் கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் அரசு ஒத்துக்கொண்டால் அங்கிருக்கும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பாக நாளையே அழைத்துவரக்கூடிய கூடிய நிலமை இருக்கும்போது ஏன் பொதுமக்கள் மீது இப்படியான கொடூரமான ஆட்டிலறித் தாக்குதல்களைப் பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்கின்றது?” எனக் கேட்டிருந்தேன்.
அவர் தான் பாதுகாப்பு அமைச்சோடு பேசி ஒரு முடிவுக்கு வருவதாக என்னிடம் கூறினார். ஆனால், அவர் மீண்டும் என்னிடம் தொடர்பு கொண்டு அடுத்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் 17ஆம் திகதி நடக்கும் வரை இந்தத் தாக்குதல் திட்டம் தொடரும் என பாதுகாப்பு அமைச்சு தனக்கு அறிவித்ததாக அவர் கூறினார். இந்தப் பயங்கரமான நிலைமையின் தாற்பரியத்தை நம்புவதற்கு நீங்கள் மறுக்கலாம் அப்படி நடந்தது என்பதைகூறக்கூட நீஙகள் மறுக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் நேரடி சாட்சியாக நான் இருக்கின்றேன்.
போர்வலயத்துள் சிக்கியுள்ள ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டும் தமதுஆயுதங்களை மௌனிக்கத் தயாராக இருப்பதாக 16 மே பிற்பகல் 4 மணியளவில் மிக தெளிவாகஎன்னூடாக அரசுக்கு அறிவித்திருந்தார்கள். ஆனால், பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களைப் பாதுகாக்கும் அந்த முயற்சியை ஏற்க அடியோடு மறுத்துவிட்டது. மாறாக கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தினார்கள். அதற்கு நான் சாட்சிமேலும் கடந்த வருடம் இந்த அவையில் உரையாற்றிய சரத் பொன்சேகா, போரின் இறுதி நாள் வரை கடுமையான கனரக ஆயுத தாக்குதல்கள் தொடர்ந்து நட்டத்தப்பட்டதாக உரிமை கோரியிருந்தார்.
இப்படியாக போரில் ஈடுபட்ட ஒரு தரப்பு தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்திருந்த நிலையில் நீங்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்தும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதென்பது மக்களின் உயிரிழப்பை முடிந்தளவு அதிகரித்து அந்த மக்களை முழுமையாகவோ ஆகக்குறைந்தது பகுதியாகவோ அழிப்பது என்னும் ஒரே நோக்கத்துக்காகவே என்பது தெளிவாகின்றது.
போரில் ஈடுபட்ட ஒரு தரப்பு ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த போதிலும் போர் வலயத்தில் மக்கள் சிக்குண்டிருப்பதை உறுதியாகத் தெரிந்து கொண்ட பிறகும் இப்படியாக அந்தப் பிரதேசம் மீது பீரங்கித் தாக்குதலை நடத்தியது இனப்படுகொலை என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு சாதாரணமான ஒரு குற்றம் அல்ல. எவரும் எண்ணிப் பார்க்க முடியாத மிக பயங்கரமான குற்றம் இது.
பாதுகாப்பு அமைச்சு, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அனைத்தும் இந்த இனப்படுகொலையின் குற்றவாளிகளே. அனைவரும் இலங்கையர்கள் எனச் சிந்திக்க வேண்டும் என நீங்கள் கூறிக்கொள்கின்ற இந்த சமயத்தில் இலங்கையில் இப்படியான ஒரு குற்றம் நடந்ததா? இல்லையா? என உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவாவது ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்துவது உங்களது பொறுப்பில்லையா?
ஆனால், நாம் இது குறித்துபேச முற்படும் போதெல்லாம நீங்கள் எழுத்து நின்று எந்தவொரு குற்றத்தையும் நீங்கள் இழக்கவில்லை என்றே கூறுகிறீர்கள். அப்படி நீஙகள் குற்றம் இழைக்கவில்லையெனில் எதற்கு அஞ்சுகிறீர்கள்? ஏன் ஓடி ஒழிகிறீர்கள்? நீங்கள் இனப்படுகொலை புரியவில்லையென்றால் போர் முடிந்து 13 வருடங்கள் ஆன பிற்பாடும் விசாரணைகளுக்குப பயந்து ஏன் ஓடி ஒழிகிறீர்கள்?
உண்மையான பொறுப்புக்கூறல் இடம்பெறும் வரைக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதை உணரும் வரைக்கும் இங்கு சமாதானம் என்பது எட்டாக்கனியே என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? அதுவரைக்கும் அனைவரும் ஒருங்கிணைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என நினைக்கிறீர்களா? இனப்படுகொலை என்பது வெறுமனே மக்களைக் கொல்வது மட்டும் அல்ல. இறுதிப் போர் அதன் உக்கிர நிலையை அடைய முன்பு வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஏறத்தாழ 4 இலட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அரசானது அங்கு 70 ஆயிரம் பொதுமக்களே இருப்பதாக கூறிக்கொண்டு 70 ஆயிரம் பேருக்கான உணவையும் மருந்தையுமே அனுப்பி அந்த மக்களைப் பட்டினி போட்டது. அதன் மூலம் அந்த மக்கள் முழுமையாகவோ பகுதியாகவோ அழியக்கூடிய நிலையை உருவாக்கியிருந்தீர்கள். இது இனப்படுகொலையே” – என்றார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் சரத் வீரசேகர கொதித்தெழுந்து கஜேந்திரகுமாரின் பேச்சைக் குழப்பி தாம் இனப்படுகொலை புரியவில்லை என்றும், பொதுமக்களை மீட்டோம் என்றும் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய கஜேந்திரகுமார் எம்.பி.,
“இனப்படுகொலையில் நீங்களும் ஒரு குற்றவாளி என்றே நாம் கூறுகின்றோம். இனப்படுகொலை நடந்ததாக நான் பொய் கூறுவதாக நீங்கள் கூறினால் அதை ஏன் நீங்கள் சரவ்தேச நீதிமன்றத்துக்குத் துணிவுடன் சென்று சாட்சிகளைக் கொடுக்கக் கூடாது? இனப்படுகொலை செய்யவில்லையெனில் ஏன் நீங்கள் பயமின்றி ரோம் சாசனத்தில் கையெழுத்திடக்கூடாது? நீங்கள் குற்றமற்றவர்களெனில் ஏன் அஞ்சுகிறீர்கள்? நாங்கள் தமிழ் பிரதிநிதிகள் இந்தச் சபையில் கூறுவதைக்கூட கூறவிடாமல குழப்புகிறீர்கள். இது எதற்காக? நீங்கள் குற்றமற்றவர்களெனில் ஏன் பயப்படுகின்றீர்கள்?
இன்று போர் முடிந்து 13 வருடங்கள் ஆனாலும் வடக்கு, கிழக்கில் பாரிய இராணுவ கட்டமைப்பை பேணிக்கொண்டு இருக்கிறீர்கள். வடக்கு, கிழக்கில் 10 பேருக்கு 1 என்ற விகிதத்தில் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது. வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவம் இருக்கிறது. இப்படி இராணுவத்தை நிலை நிறுத்துவதன் மூலம் மக்களை ஒரு பயப்பிராந்திக்குள் வைத்திருக்க முயல்கிறீர்கள். போர் முடிந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட பின்னரும் நீங்கள் செய்த குற்றங்களின் ஆதாரங்கள் வெளியே சென்றுவிடும் என அஞ்சுகிறீகள்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் தனது கடந்த அறிக்கையில் குறிப்பிட்டபடி இலங்கைப் படையினரின் குற்றங்கள் குறித்து ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கோவைகள் தம்மிடம் இருப்பதாகக் கூறியதையிட்டு அஞ்சுகிறீர்கள். நீங்கள் உண்மைகளைக் கண்டு அஞ்சுகிறீர்கள். உண்மைகளைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டு இருக்கும் வரையில் இனப்படுகொலை புரிந்தவர்களை பாதுகாத்துக்கொண்டு இருக்கும் வரையில் இனப்படுகொலை என்பது தப்பிக்கொள்ளக்கூடிய ஒரு குற்றம் என நம்பிக்கொண்டிருக்கும் வரையிலும் உங்களால் சமாதானத்தைக் கட்டியெழுப்பவும் முடியாது; பாதுகாப்பாக உணரவும் முடியாது.
உங்கள் சரிபிழைகளைக் கண்டுகொள்ளாமல் உங்களை ஆதரிக்க கூடியவர்களை நண்பர்களாக்கி இனப்படுகொலைக்கான நீதியை வழங்காமல் இருப்பதை உறுதிப்படுத்தி கொண்டு உங்கள் பிழைகளை மறைக்கக்கூடிய கூட்டாளிகளை பெறுவதற்காக உங்கள் நாட்டையே நீங்கள் கூறுபோட்டு விற்கத் தொடங்கியிருக்கிறீர்கள்.
நீங்கள் நேசிப்பதாக கூறுகின்ற இந்த நாட்டின் ஆத்மாவையே ஒவ்வொரு நாளும் விற்கத் தொடங்கியிருக்கிறீர்கள். இன்று இலங்கை பங்களாதேசத்திடமும் கையேந்துகின்ற நிலமை வந்திருக்கின்றது. போர் முடிவடைந்து 13 வருடங்களில் நீங்கள் சாதித்தது இதைத்தான். அதைப் பார்க்க வெட்கமாக இல்லையா? இந்தத் தீவில் இருக்கும் ஒவ்வொரு தேசங்களும் தம்மை பாதுகாப்பாக உணரும்போதுதான் இது உண்மையான இலங்கை.
இந்தத் தீவில் இருக்கும் ஒவ்வொரும் தேசங்களும் தம்மைப் பாதுகாப்பாக உணரும்போதுதான் தாம் இலங்கையன் என ஒருவனால் விசுவாசமாக உணர முடியும். அது வரைக்கும் நீங்கள் விரும்புகின்ற அந்த இலங்கை எனும் நாட்டை உருவாக்கிகொள்ள உங்களால் முடியாது.
மாறாக நீங்கள் இனவாத பாதையிலேயே தொடர்ந்தும் சென்று இனங்களுக்கிடையிலே பிரிவினையையும் குரோதத்தையும் வளர்க்கிறீர்கள். அப்படி இந்த மக்களை பிளவுபடுத்தி வைப்பதன் மூலமே உங்கள் வாக்குவங்கியை நீங்கள் நிலைநிறுத்திக் கொள்கிறீர்கள். ஆனால், இன்று இந்த நாட்டு மக்கள்எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளால் சாதாராண சிங்கள் மக்களே என்றுமில்லாதவாறு முதல் தடவையாகதமது தலைவர்களுக்கு எதிராக கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். நானோ அல்லது எனது சக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களோ சொல்வதை இனவாத பேச்சு என இதுவரை காலமும் சொல்லி தள்ளி வைத்த சாதாரண சிங்கள மக்களும் இன்று உண்மையை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் சொல்பவற்றை செவிமடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழர்கள் குறித்தும் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்தும் சாதாரண சிங்கள மக்களுக்கு அவர்களின் தலைவர்களால் சொல்லப்பட்டு வந்த பொய்கள் குறித்து கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் தொடர்ந்தும் நீங்கள் இந்த அராஜகப் போக்கிலேயே போக முடியாது. மாறாக இந்தப் போக்கிலேயே போனால் நாட்டின் ஸ்திரத்தன்மை குலைந்து பிளவடையப்போவது சிங்களத் தலைவர்களாலேயே அன்றி தமிழ் மக்களால் அல்ல. ஏனெனில் உண்மைகள் புரியத் தொடங்கும்போது ஒரு சிங்களவர் எழுந்து “கருணையையும் அன்பையும் அகிம்சையையும் போதிக்கும் புத்தர் பெருமானை நான்பின் தொடர்கிறேன்வ் பூசிக்கிறேன். ஆனால், எங்களது பெயரினால் இப்படியான கொடூரங்கள்தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்றதெனில் அந்த மக்களுக்கு அவர்கள் விரும்புகின்ற பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறுவார் என நம்புகின்றேன்.
உங்கள் பாதையை நீங்கள் மாற்றிக்கொள்ளாதுவிடின் நிச்சயம் அப்படி ஒரு நிலைமை உருவாகும். தமிழர்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. அவர்கள் யாருக்கும் எதிராக போருக்கும் முன்வரவில்லை. அவர்கள் கேட்பது எல்லாம் தமக்கே உரித்தான உரிமைகளை மட்டும்தான். அதற்காகத்தான் கடந்த 75 வருடங்களாக அவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கை ஒரு நாடாக ஸ்திரத்தன்மையுடன் தொடர்ந்தும் இருக்க வேண்டுமெனில் நீங்கள் கடந்த 74 வருடங்களாக செல்லும் அதே பாதையில்தொடர்ந்தும் செல்ல முடியாது. இலங்கை ஒரு பல்தேசங்கள் கொண்ட நாடென்பதை ஏற்றுக்கொள்ளாத வரைக்கும் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை அங்கீகரிக்காத வரைக்கும் நீங்கள் எங்களை மட்டுமல்லாது உங்களையும் சேர்த்தே அழிக்கப்போகின்றீர்கள் என்பதை மீண்டும் தெரிவித்துகொள்கின்றேன்” என்றார்.