சிங்கள மயமாகின்றது பனை அபிவிருத்திச் சபை

121 Views

பனை அபிவிருத்திச் சபை

பனை அபிவிருத்திச் சபையில் இதுவரை காலமும் பெரும்பான்மையாக தமிழர்களே பணிபுரிந்து வந்த நிலையில் அதனை மாற்றியமைத்து சிங்களவர்கள் உள்ளீர்க்கப்படுகின்றனர்.

அத்துடன் வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு அமைவாக பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகம் யாழ்ப்பாணத்தில் செயற்பட வேண்டிய நிலையில் அதனை இரகசியமாக கொழும்புக்கு மாற்றும் திட்டம் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறப்பாக காணப்படும் வளமான பனைக்குரிய அபிவிருத்திச் சபை மெல்ல மெல்ல சிங்களமயமாகி போவது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று பனை அபிவிருத்திச் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

பனை அபிவிருத்திச் சபை 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் தலைவர்களாக தமிழர்களே நியமிக்கப்பட்டு வந்தனர். ராஜபக்ச ஆட்சியின் பின்னர், பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக முதன்முறையாக பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பின்னணியிலேயே சபையை முழுமையாக சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

பனை அபிவிருத்திச் சபை உருவாக்கப்படும்போதே அதன் தலைமையகம் யாழ்ப்பாணத்திலேயே அமைய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்திலேயே இயங்கியது. தற்போது அதன் கணக்காய்வு பிரிவு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாகப் பிரிவையும் கொழும்புக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. முற்று முழுதாக தலைமை அலுவலகத்தை கொழும்புக்கு மாற்றும் நடவடிக்கையின் ஆரம்பமே இது என்று சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை, பனை அபிவிருத்திச் சபையில் இணைக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களில் தமிழர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாத அதேவேளை, சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த முடக்க காலத்தில் நேர்முகத் தேர்வு கொழும்பில் நடத்தப்பட்டுள்ளது. அதில் வடக்கைச் சேர்ந்த ஒரு சிலருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் சிங்களவர்களே அதிகம் பங்குபற்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பனை அபிவிருத்திச் சபையில் பணியாற்றி ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற காலத்திலிருந்து ஒரு மாதத்துக்குள் பணிக் கொடை வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு இன்னமும் பணிக் கொடை வழங்கப்படவில்லை.

பனை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான கைதடியில் உள்ள கட்டடம் முன்னைய நல்லாட்சி அரசின் காலத்தில் அமைச்சராக இருந்த சுவாமிநாதனால் திறந்து வைக்கப்பட்டது. அதற்குரிய நினைவுக் கல் தற்போது பிடுங்கி அகற்றப்பட்டுள்ளது.

மேலும், பிரதி பொது முகாமையாளர் மற்றும் உள்ளக கணக்காய்வாளர் ஆகியோர் உரிய விசாரணைகளின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களது இடத்துக்கு தற்போது பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கணக்காளர் பதவி வெற்றிடத்துக்கு இரண்டு வருடமாக சகலவித தகுதியுடனும் அனுபவத்துடனும் பதில் கடமையில் உள்ள தமிழர் நியமிக்கப்படாது அதே இடத்துக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பனை அபிவிருத்திச் சபையை சிங்களமயமாக்கும் முயற்சி தொடர்பில் ஆளும் கட்சியின் சார்பில் வடக்கில் உள்ள அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ எந்தவித எதிர்ப்பையும் காண்பிக்கவில்லை என்று பனை அபிவிருத்திச் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad  சிங்கள மயமாகின்றது பனை அபிவிருத்திச் சபை

Leave a Reply