வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரிப் போராடிவரும் தாய்மார் ஒவ்வொருவரும் பதில் கிட்டாமல் உயிரிழக்கும்போது எதிர்கால நீதிக்கான சாட்சியமும் ஒவ்வொன்றாக அழிந்துபோகின்றது. எது எவ்வாறிருப்பினும் எமக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படும் வரை எமது போராட்டம் தொடரும் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சனி யோகராசா தெரிவித்தார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையுரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ்வுரையில் அவர் மேலும் கூறியதாவது:
மாநாடு சாதாரணமானதொரு மாநாடு அல்ல. மாறாக பல ஆண்டுகளாக கேட்காத எமது குரலை சர்வதேசத்துக்குக் கேட்கச் செய்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் வீதிகளில் இறங்கிப்போராடிய தாய்மாரின் கண்ணீருடன் இந்தப் போராட்டம் ஆரம்பமானது. இற்றை வரையான காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையான தாய்மார் அவர்களுக்கான பதில் கிட்டாமலேயே உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் ‘எமது அன்புக்குரியவர்கள் எங்கே?’ என்ற கேள்வி இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்றது. எமது அன்புக்குரியவர்கள் அங்கே? அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் உயிருடன் இல்லாவிட்டால், அதற்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கான பதில்கள் தெரியாமல் இருப்பது பெரும் அவலமாகும்.
எமது உறவுகள் வலிந்து காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. தனியொரு கட்டமைப்பை எதிர்ப்பது எமது நோக்கம் அல்ல. இருப்பினும் எமது அன்புக்குரியவர்களுக்கான குற்றவியல் நீதிப்பொறிமுறைக்கு மாற்றீடாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஒருபோதும் இருக்கமுடியாது. வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும் உயரதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். சாட்சியங்கள் பாதுகாக்கப்படவேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும்.
அதேவேளை இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு சர்வதேச சமூகத்தின் பங்கேற்பும் இன்றியமையாததாகும். உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் என்பன எந்தளவுக்கு பாதகமானதாக இருந்தாலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
தற்போது நீதிகோரிப் போராடிவரும் தாய்மார் ஒவ்வொருவரும் பதில் கிட்டாமல் உயிரிழக்கும்போது எதிர்கால நீதிக்கான சாட்சியமும் ஒவ்வொன்றாக அழிந்துபோகின்றது. எது எவ்வாறிருப்பினும் எமக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.



