ஈழத்தமிழரை கைவிட்டதுபோல் மலையகத் தமிழரையும் கைவிடக்கூடாது – ஐ.நாவிடம் மனோ கணேசன் வலியுறுத்தல்

மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான முழுமையான அதிகாரங்களை அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இந்த அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். மத்திய மலைநாடு இலங்கையின் இதயம் எனவும், மண் சரிவுகள், நீரூற்றுகள் வற்றுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், புதிய அதிகாரசபை மூலம் மலையகத் தமிழர்களின் காணி உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஐ.நா. இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்ஞ்ஞை சந்தித்து விளக்கமளித்த அவர், ஈழத்தமிழரை கைவிட்டதுபோல் மலையகத் தமிழரையும் ஐ.நா. கைவிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.