மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை – வேல்ஸ் இல் இருந்த அருஸ்

547 Views

மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை

வேல்ஸ் இல் இருந்த அருஸ்

மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை: சீனத் தூதுவரின் யாழ் பயணம், இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக கொண்டுவரும் பயணத் தடைகள், 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற ஆவலாக இருக்கும் இந்தியா என்பன கடந்து சென்ற வருடத்தின் இறுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளாகும்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை அரசை தனது வலையில் விழவைப்பதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள், சீனாவுக்கு தனக்கான பேரம்பேசும் தரப்பு ஒன்றைத் தேடும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. அதன் வெளிப்பாடுகள் தான், தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேண முற்பட்டும் விதமாக அமைந்திருந்த சீனத் தூதரகக் குழுவின் பயணம்.

இந்திய மற்றும் சிங்கள மீனவர்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களுக்கான உதவி, கடற்தொழிலை மேம்படுத்தும் திட்டங்கள், சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்ட யாழ். நூலகத்தை இணையவழி நூலகமாக மாற்றம் திட்டம் என்பவற்றுடன் நின்றுவிடாது, வடக்கின் பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திற்கும் சம்பிரதாய விதிகளை மதித்து வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 20 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிக்சை அளிக்கும் இயந்திரங்களையும் வழங்கியிருந்தனர்.

மாகாண சுகாதார அமைச்சு இருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடாக வழங்கப்பட்ட இந்த உதவி என்பது இலங்கையில் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் வெளிவிவகாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த சீனா விரும்புவதையே காட்டுகின்றது.

அதேசமயம், இலங்கை அரசு மீதான பொருளாதார அழுத்தங்களையும் சீனா மறைமுகமாக மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகின்றதா என்ற சந்தேகமும் தென்னிலங்கையில் எழுந்துள்ளது.

இயற்கை உரம் இறக்குமதி விவகாரத்தில் இலங்கை அரசு 6.7 மில்லியன் டொலர்கள் தண்டப்பணம் செலுத்தத் தீர்மானித்துள்ள போதும், இலங்கை மீது ஒரு பொருளாதாரத் தடை ஏற்படுத்தப்பட வேண்டும் என சீ விங் நிறுவனம் சீன அரசைக் கேட்டுள்ளது. மேலும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் அது பரிந்துரை செய்துள்ளது.

இதனிடையே தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் மூலம் நகர்வை மேற்கொள்ளலாம் என்பதில் நம்பிக்கை இழந்துள்ள அமெரிக்கா, தனது கூட்டணி நாடுகளின் ஊடாக அதனை நேரிடையாக மேற்கொள்ள முனைந்து நிற்கின்றது. அதன் வெளிப்பாடுகள் தான் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள். அது மட்டுமல்லாது, தமிழ் அரசியல்வாதிகளையும் அதில் பயன்படுத்திக் கொள்ள அது தற்போது முனைப்புக் காட்டுகின்றது.

China ambasider Tamil மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை - வேல்ஸ் இல் இருந்த அருஸ்இலங்கையில் மேற்கொள்ளப்படும் அமெரிக்காவின் அபிவிருத்தித் திட்டங்களைப் பிராந்திய சக்திகளின் பின்புலத்துடன் சிங்கள இனம் முறியடித்து வருவதுடன், தமது பொருளாதார சிக்கலைத் தீர்க்கவும், இலங்கை அரசு மேற்குலகம் சார்ந்த அனைத்துலக நாணய நிதியத்தின் உதவியை விடுத்து, பிராந்திய வல்லரசுகளின் உதவியை நாடுவது என்பது இலங்கை விவகாரத்தில் மேற்குலகத்தின் நகர்வுகள் அனைத்தும் தோல்வியைச் சந்திப்பதையே காட்டுகின்றது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா இலங்கை மீதான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு படை அதிகாரிகள் மீது பயணத்தடையை விதித்த அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை, தற்போது மேலும் ஒரு ஜெனரலுக்கும் தடை விதித்துள்ளது.

அது மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் தனது ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றது. எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அமெரிக்கா தன்னை இணைத்துக் கொண்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், தனது இழந்த பிடியை மீண்டும் தூக்கி நிறுத்தக் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழ் கட்சிகள் இந்தியாவைக் கூட்டாகக் கோரவேண்டும் என்ற கொள்கையில் இந்தியா ஆவலாக உள்ளதுடன், அதற்கான ஒன்றிணைத்தலிலும் இந்தியத் தூதுவர் இரவு பகலாக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நகர்வுகளில் நாம் எவ்வாறு பயணிக்க வேண்டும் அல்லது அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு தெளிவான வெளிவிவகாரக் கொள்கை வேண்டும் என நாம் எப்போதும் வலியுறுத்துவது உண்டு.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான காத்திரமான கொள்கை தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளிடமோ அல்லது புலம்பெயர் தேசத்து அமைப்புகளிடமோ இல்லை என்பதே உண்மை. ஆனால் அதனை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இன்று எம்மில் சிலர் இந்தியாவை எதிர்க்கின்றனர். சிலர் சீனாவை எதிர்க்கின்றனர். சிலர் மேற்குலகத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது எதனால் என்றால், நாம் ஒரு தெளிவான வெளிவிவகாரக் கொள்கை உள்ள இனமாக எம்மை கட்டியமைக்கவில்லை என்பதாலா என்றால் அது உண்மையில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்கள் எந்த நாட்டையும் எதிர்க்கவில்லை. யாருக்கு எதிராகவும் எந்தச் சொற்களையும் பயன்படுத்தவில்லை. 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பின்னர், இலங்கைக்கான சீனத் தூதரக அதிகாரிகள் தமது குழுவினருடன் வன்னி சென்றிருந்ததுடன், விடுதலைப்புலிகளும் பிராந்திய வல்லரசுடன் நல்லுறவுகளையே பேணியிருந்தனர்.

அது மட்டுமல்லாது, பல நாடுகளுக்குச் சென்ற விடுதலைப்புலிகளின் குழுவினர், எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேணும் நடவடிக்கைகளையே முன்னெடுத் திருந்தனர்.

எமது வெளிவிவகாரக் கொள்கைஅவ்வாறான முக்கியமான நாடுகளில் தென்னாபிரிக்காவும் ஒன்று. தென்னாபிரிக்கா விற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பலமான நட்புறவுகளை ஏற்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் பேராயர் டெஸ்மட் டுட்டு ஆவார்.

தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த அவர், தென்னாபிரிக்காவின் விடுதலைப்போராளியும், அரச தலைவருமான மறைந்த நெல்சன் மண்டேலாவுடன் இணைந்தும் செயற்பட்டவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய அவர், எமது விடுதலைக்கு ஆதரவாகவும் செயற்பட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு ஆதரவாக ஆபிரிக்க நாடுகளைத் திரட்டுவதில் அவரின் பங்கு முக்கியமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று அவரை நாம் இழந்துள்ளோம். கடந்த மாதம் 26 ஆம் நாள் அவர் மரணமடைந்தது தமிழ் இனம் ஒரு நல்ல நண்பரை, எமது இனத்தின் கோரிக்கைகளை அனைத்துல மடத்தில் கொண்டு செல்வதற்கான ஒரு தளத்தை இழந்துள்ளது.

தமிழீழ நடைமுறை அரசு

எமது வெளிவிவகாரக் கொள்கைஒரு தெளிவான வெளிவிவகாரக் கொள்கை எம்மிடம் இல்லை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் தமிழீழ நடைமுறை அரசு இருந்தபோது எம்மிடம் அதற்கான தெளிவான கொள்கை இருந்தது.

எந்த நாட்டையும், எந்த இனத்தையும் அந்த நடைமுறை அரசு பகைக்கவில்லை. ஆனால் இன்று நாம் அதனை மறந்து எமது நலம் சார்ந்து இயங்குவதே தற்போதைய சீரழிவுக்குக் காரணம்.

அதனை விரைவாகச் சீர்செய்ய வேண்டிய கடமை ஒன்று எம்முன் உள்ளது. ஏனெனில், இலங்கை விவகாரம் தொடர்பில் அனைத்துலகத்தின் செயற்பாடுகள் விரைவாக மாற்றம் பெற்று வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போலவே இந்த வருடத்தில் முதலாவதாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இராஜதந்திரியாக சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் அமைந்துள்ளது.

Tamil News

2 COMMENTS

  1. […] மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை: சீனத் தூதுவரின் யாழ் பயணம், இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக கொண்டுவரும் பயணத் தடைகள்மேலும் தெரிந்து கொள்ள: https://www.ilakku.org/ https://www.ilakku.org/ilakku-weekly-epaper-163-january-02-2022/  […]

Leave a Reply